Vijay Aadhav Arjuna meeting

Advertisment

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பரந்தூர் சென்று வந்த நிலையில் தொடர்ந்து அடுத்த கட்டமாக மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த 24/01/2025 ஆம் தேதி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 19 மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று (29/01/2025) பனையூரில் புதிய நிர்வாகிகள் உடனான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்களுக்கு ஆணைகளை வழங்கிய நடிகர் விஜய், ''தலைமைக்கு புகார்கள் வரும் பட்சத்தில் மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது. கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் உரிய நிர்வாக வாய்ப்பையும், பிரதிநிதித்துவத்தையும் வழங்க வேண்டும். நிர்வாகப் பொறுப்புகளை வழங்குவதில் எந்தவித சமரசம் செய்யக்கூடாது. நிர்வாகிகளை நியமிக்கும் போது கட்சியின் கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் தொண்டர்களுக்கு நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும்.

2026 நிச்சயமாக நம் கட்சி வெற்றி பெறும். கட்சிக்கு உண்மையாக நேர்மையாக உழைக்க வேண்டும். மக்கள் இயக்கமாக இருந்தபோது நன்றாக பணியாற்றி வந்தீர்கள், அதேபோல் கட்சிப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இப்போது உங்களை நம்பியே கட்சியை தொடங்கி இருக்கிறேன். மக்களுக்காகவே தமிழக வெற்றிக் கழகம். எனவே நீங்கள் மக்களுக்காக செயல்பட வேண்டும்'' என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Advertisment

இந்நிலையில் அண்மையில் விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னை பட்டினம்பக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொண்டதாகவும், இந்த சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'வாய்ஸ் ஆப் காமன்' என்ற நிறுவனத்தை நடத்திவரும் ஆதவ் அர்ஜுனா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து அரசியல் ஆலோசகரான செயல்பட இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.