/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/doc-balaj-acc-viknesh-art_0.jpg)
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில் தான் இன்று (13.11.2024) காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் தாயாருக்கு சம்பவம் நடைபெற்ற மருத்துவமனையில் கடந்த நான்கு மாத காலமாகப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரனும் அவருடன் வந்த மற்றொரு நபரும் மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபர்களிடம் அலட்சியமாகப் பதில் அளித்ததால் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் குத்தியதாக விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
மேலும் இது குறித்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ்வரன் மீது கிண்டி போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர் மீது தாக்குதல், கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாகப் பேசுதல், தமிழ்நாடு மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டப்பிரிவு என 127 (2),132, 307, 506 (2) உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சைதாப்பேட்டை பெருநகர 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் விக்னேஷ்வரன்ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் விக்னேஷ்வரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி வரும் 27ஆம் தேதி வரை விக்னேஷ் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரனை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)