Skip to main content

ஊழலுக்குத் துணைபோன துணைவேந்தர் பதவி! - அதிமுக மா.செ. ரவிச்சந்திரன் மீதும் வழக்கு!

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

Vice-Chancellor's position supported by corruption! - AIADMK M.S. Case against Ravichandran!

கடந்த மே 04-06 தேதியிட்ட நக்கீரன் இதழில்  ‘துணைவேந்தர் பதவியில் துஷ்பிரயோகம்! தோண்டத் தோண்ட ஊழல்!’ என்னும் தலைப்பில், சபாநாயகர் பொறுப்பு வகித்த அமரர் கா.காளிமுத்துவின் கடைசித் தம்பியான நல்லதம்பி, தன்னுடைய அண்ணனும் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கா.ரவிச்சந்திரன் மற்றும் தனது அண்ணியும் மதர் தெரஸா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வள்ளி மீது ஊழல் புகார் அளித்திருந்தது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். 

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நல்லதம்பி கொடுத்த அந்த ஊழல் புகார் மீது, சாத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலமாக, வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் முதல்கட்ட விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து,  உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ரவிச்சந்திரன், அவருடைய மனைவி வள்ளி மீது, 406 (ஏமாற்றுதல்) மற்றும் 420 (நம்பிக்கை மோசடி செய்தல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ்,  ஆகஸ்ட் 20-ஆம் தேதி  வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 

 

Vice-Chancellor's position supported by corruption! - AIADMK M.S. Case against Ravichandran!

 

நக்கீரன் செய்தி வெளியிட்டு மூன்று மாதங்கள் ஆனபிறகு, வழக்குப் பதிவு செய்து, ஊழலுக்கு எதிரான முதல் அடியை எடுத்துவைத்துள்ளது தமிழக காவல்துறை. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ள விபரம் பின்வருமாறு; நல்லதம்பியாகிய நான், வழக்குரைஞராக, விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, மதுரை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராக முன்பு பணி செய்தவன். அரசியலில் ஊராட்சி மன்றத் தலைவராக, ஒன்றிய கவுன்சிலராக, மாவட்ட கவுன்சிலராகப் பதவி வகித்திருக்கிறேன். தற்சமயம் எனது மனைவி மாலதி மாவட்ட கவுன்சிலராக உள்ளார். நான் முன்னாள் சபாநாயகர் காலஞ்சென்ற காளிமுத்துவின் கடைத் தம்பி. எனது உடன்பிறந்த சகோதரர் கா.ரவிச்சந்திரன் தற்சமயம் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். அவரது மனைவி வள்ளி கொடைக்கானல் மதர் தெரஸா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2016 முதல் 2019 வரை பணியாற்றினார். நான் கொடைக்கானல் சென்று வந்த பொழுது கொடைக்கானல் கிளாஸிக் காம்ப்ளக்ஸில் சத்யா கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வந்த எனக்கு விஜய் அறிமுகமானார். அவரது பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்பதால் எனக்கு நெருக்கமானார்.

 

எனது சகோதரர் ரவிச்சந்திரன் மனைவி கொடைக்கானல் மதர் தெரஸா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பதை அறிந்த விஜய், அந்தப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு தனது உறவினர்களுக்கு நியமனம் பெற்றுத்தர வேண்டினார். 2017 அக்டேபர் 2-வது வாரத்தில் நான் விஜய்க்கு எனது சகோதரன் கா.ரவிச்சந்திரன் மற்றும் திருமதி வள்ளி இவர்களை அவர்களது மதுரை திருவள்ளுவர் தெரு குறிஞ்சி நகர் வீட்டில் வைத்து அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது, அவர்களது ஓட்டுநர் கணேசன் உடன் இருந்தார். எனது அண்ணி வள்ளி மகளிருக்கு பல்வேறு துறைகளில் உதவி பேராசிரியர் மற்றும் எழுத்தர் பணி பெற்றுத் தருவதாகவும் அதற்கான தொகைகளை ஏற்பாடு செய்யும் படியும் சொன்னார். 
 

 

Vice-Chancellor's position supported by corruption! - AIADMK M.S. Case against Ravichandran!

 

நான் எனது சகோதரன் ரவிச்சந்திரன் மற்றும் துணைவேந்தர் வள்ளி மூலம் பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் TNSET மதர் தெரஸா பல்கலைக்கழகம் மூலம் தேர்ச்சி பெற, போதுமணி க/பெ யோகேஷ், மங்கையர்க்கரசி க/பெ திரவியம், அன்புமணி க/பெ சின்னத்துரை ஆகியோருக்கு உதவினேன். TNSET தேர்வு நடத்துவதற்கு, ஆவின் துறையில் பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தும் அதிகாரம் பெற்ற மதர்தெரஸா பல்கலைக்கழகத்தில் 2016 முதல் 2019 வரை கா. ரவிச்சந்திரன் மற்றும் வள்ளி மூலம் பலபேர் பணம் கொடுத்து தகுதியில்லாமல் தேர்ச்சி பெற்ற விபரம் மதுரை முனியசாமி போன்றோருக்கு தெரியும். கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவின் மந்திரியாக இருந்த பொழுது, அவரது உதவியாளர் பாபுராஜ் மகன் ஆவின் மேலாளர் தகுதி தேர்வில் ரவிச்சந்திரன் வள்ளி மூலம், தகுதியில்லாவிட்டாலும் தேர்வில் தேர்ச்சி செய்யப்பட்டார். கொடைக்கானல் விஜய் அவரது மனைவி சத்யாவிற்கு கணினி உதவிப் பேராசிரியர் பணிக்கு முன்பணமாக ரூ.15 லட்சம் ஏற்பாடு செய்து விட்டு என்னை மதுரையில் வந்து சந்தித்தார். 2017 நவம்பர் மாதம் முதல் வாரம் சிவகாசி ஹவுஸிங்போர்டு A,28 அன்னை இல்லத்தில் பணம் ரூ 15 லட்சத்துடன் நானும் விஜய்யும் எனது சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் வள்ளி இவர்களைச் சந்தித்தோம். எனது சகோதரன் ரவிச்சந்திரன் வசம் ரூ.15 லட்சத்தை கொடுக்கச் சொன்னேன். விஜய் கொடுத்தார். எனது சகோதரன் ரவிச்சந்திரன் அந்தப் பணத்தை வாங்கி எனது அண்ணியார் வள்ளி வசம் கொடுத்தார். பணத்தை உள் அறையில் வைத்துவிட்டு, வள்ளி அவர்கள் உதவிப் பேராசிரியருக்கான நிரப்பப் படாத விண்ணப்பங்களை 4-5 யை விஜய் வசம் கொடுத்து, அடுத்த முறை வரும் பொழுது நிரப்பிக் கொண்டு வரவும், மீதத்தொகை ரூ.10 லட்சத்தை ஏற்பாடு செய்யவும் சொன்னார்கள். உதவிப் பேராசிரியர் கணிதம் மற்றும் வேதியியல் மற்றும் எழுத்தர் பணிக்கு வேறு ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று வள்ளி சொன்னார்கள். 

 

துணைவேந்தர் வள்ளி அவர்கள் சொன்னதன் பேரில் டிசம்பர் 2017 முதல் வாரத்தில் ஸ்ரீஜா என்பவருக்கு வேதியியல் உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.20 லட்சம், கணிதம் உதவிப் பேராசிரியர் பணிக்கு சத்யா த/பெ செல்லப்பா என்பவருக்கு 25 லட்சம், மொத்தம் 45 லட்சத்தை விஜய் ஏற்பாடு செய்து விட்டு என்னை போனில் தொடர்பு கொண்டார். அதுசமயம் எனது சகோதரர் இராமுத்தேவன்பட்டி வீட்டில் இருந்தார். விஜய்யை அழைத்துக் கொண்டு எனது சகோதரர் ரவிச்சந்திரனை இராமுத்தேவன்பட்டி வீட்டில் சந்தித்து நான் சொன்னதன் பேரில் விஜய் ரூ.45 லட்சத்தை எனது சகோதரர் ரவிச்சந்திரன் வசம் கொடுத்தார். நானும் விஜய்யும் எனது சகோதரர் ரவிச்சந்திரனைச் சந்தித்தபோது,  அவரது ஓட்டுநர் கணேசன் உடன் இருந்தார். மதர்தெரஷா பல்கலைக்கழகத்தில் எழுத்தர் பணிக்காக திரு விஜய்,  ஜெனிபர் க/பெ ராபின் என்பவருக்கு ரூ. 4 லட்சம்,  சந்திரா க/பெ கருப்பையா என்பவருக்கு ரூ 5 லட்சம்,  கிருஷ்ணம்மாள் என்பவருக்கு ரூ.5 லட்சம்,  சுகன்யா க/பெ ரூபன்  ரூ.5 லட்சம் மற்றும் கீர்த்தனா க/பெ முருகன் என்பவருக்கு 4 லட்சம் ஆக மொத்தம் ரூ. 23 லட்சம் ஏற்பாடு செய்து,  2015 ஜனவரி முதல் மார்ச் வரை பல தவணைகளாக எனது சகோதரன் ரவிச்சந்திரன் வசம்,  சிவகாசி வீட்டில் வைத்து,  நான் சொன்னதன் பேரில் விஜய் எனது சகோதரர் ரவிச்சந்திரன் வசம் கொடுத்தார். அப்போது  எனது அண்ணியார் வள்ளி உடன் இருந்தார்கள்.  2019 வரை எனது அண்ணியார் துணைவேந்தராக இருந்த காலத்தில்  விஜய் கொடுத்த நபர்களுக்கு எந்தப் பணி நியமனமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் நியமித்து விடுவோம் என்று காலதாமதம் செய்து வந்தார்கள். 

 

விஜய்யும் நானும் பலமுறை எனது சகோதரன் ரவிச்சந்திரன் மற்றும் வள்ளி அவர்களைச் சந்தித்து பணத்தை திருப்பித்தர சிவகாசி மற்றும் இராமுத்தேவன்பட்டி வீட்டில் சந்தித்துள்ளோம். இடத்தை விற்றுத் தருகிறேன்,  நிலத்தை விற்றுத் தருகிறேன்,  நீ பொறுப்பேற்றுக் கொள், துணைவேந்தருக்கு கெட்ட பெயர் வந்துவிடாமல் பார்த்துக் கொள்,  உனக்கு நான் சீக்கிரம் செட்டில் செய்கிறேன் என்று என்னைச் சரிக்கட்டி வந்தார். விஜய் என்னிடம், நீங்கள் உறுதி அளித்ததால்தான் உங்கள் சகோதரர் மற்றும் அண்ணி வசம் பணம் கொடுத்தேன் என்று என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். பணம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் எனது சகோதரன் மற்றும் வள்ளி வசம் பணம் கொடுத்த விஷயம் தெரியும். 

 

இந்நிலையில்,  நான்  வெவம்பக்கோட்டை அதிமுக  ஒன்றியச் செயலாளராகவும் சாத்தூர் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டேன் எனது சகோதரர் ரவிச்சந்திரன்,  விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அரசியலில் இணைந்து செயல்படுவோம்.  அதுவரை கொஞ்சம் பொறுமையாக இரு.  எல்லா பிரச்சனைகளையும் பாலாஜிக்கு நெருக்கம் என்பதால்,  சாத்தூர் மேட்டமலை பூபாலன் சாத்தூர் மணி நான் சொன்னதன் பேரில் பஞ்சாயத்து எழுத்தர் வேலைக்கு ரூ12 லட்சத்தை,  எனது சகோதருக்கு இராமுத்தேவன்பட்டி வீட்டில் வைத்துக் கொடுத்தார்கள். எந்த வேலையும் நடக்காத சூழலில், எனது சகோதரர் ரவிச்சந்திரனை  சாத்தூர் சட்டமன்ற வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்தது. கட்சித் தலைமை கொடுக்கும் பணத்தில் உனக்கு செட்டில் செய்து விடுகிறேன் என்று சொன்னார். ஆனால்,  ஊட்டியில் போய் வக்கீல் முத்துப்பாண்டி, ஆய்வாளர் சிவா இவர்கள் உதவியுடன் ரூ10.80  கோடி பெற்று வந்து,  வெறும் ரூ.25 லட்சம் மட்டும் எனக்கு திருப்பிக் கொடுத்தார்.  அந்தப் பணத்தில் ரூ 15 லட்சத்தை  கொடைக்கானலில் விஜய்யிடம் திருப்பிக் கொடுத்தேன். மீதிப்பணத்தை இதோ தருகிறேன் அதோ தருகிறேன் என்று கூறி என்னை சமாதானம் செய்து ஏமாற்றிவிட்டார். 

 

நான் பொறுப்பு ஏற்றுக்கொண்டதால், பணத்தை கொடுத்தவர்கள் என்னை நெருக்குகின்றார்கள், நான் சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து நோயாளியாக இருக்கிறேன். எனது சகோதரர் ரவிச்சந்திரன் எனது அண்ணியார் துணைவேந்தராக இருந்த காலத்தில், 2016 முதல் 2019 வரை பலகோடி பெறுமானமுள்ள சொத்துக்களை வாங்கிப் போட்டு, பணம் வாங்கிக் கொடுத்த என்னை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். மதுரை நத்தம் ரோடு ராமகிருஷ்ணா மடம் எதிரில், திருவள்ளுவர் தெரு குறிஞ்சி நகரில், 4/58-ல் ஆரோவில்லா என்னும் பல கோடி மதிப்பிலான வீடு,  நத்தம் ரோட்டில் உள்ள சத்யா எலைட் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எதிரில் குடிசை மாற்று வாரியத்தில் 2 வீடுகள், சிவகாசி சித்துராஜபுரம் - வெம்பக்கோட்டை ரோட்டில் காலியிடம், சிவகாசி ஹவுஸிங் போர்டு எதிரில் மகிழ் கிளினிக் காலியிடம் என,  மனைவி பெயரிலும் மகள் பெயரிலும் பலகோடி மதிப்பில், தனது மனைவியின் துணைவேந்தர் பதவியை தவறாகப் பயன்படுத்தி சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். சொந்தத் தம்பியையே ஏமாற்றி நடுத்தெருவில் சாகும் தருவாயில் விட்டு விட்டு பலபேரை மோசடி செய்திருக்கிறார்கள், ரவிச்சந்திரனும் அவரது மனைவி வள்ளியும்.

 

நல்லதம்பி அளித்த புகாரின் பேரில் பதிவான வழக்கில் இடம்பெற்றுள்ள ஊழல் சமாச்சாரங்களைப் படிக்கும்போது யாருக்கும் தலைச்சுற்றும். அந்த அளவுக்கு, ஒரு அரசியல் அடையாளத்தை வைத்துக்கொண்டு, ரவிச்சந்திரன், வள்ளி மற்றும் நல்லதம்பி போன்றோர் ஊழல் சகதியில் புரண்டுள்ளதை, இந்த வழக்கு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் அதிமுக வேட்பாளரான ரவிச்சந்திரனுக்கு, தேர்தல் செலவுக்காக ரூ.10.80 கோடியை அக்கட்சித் தலைமை கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது. 

 


நம்மிடம் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் “என் தம்பி நல்லதம்பி, தான் படிச்ச படிப்பு, அறிவு எல்லாத்தையும் மோசடிக்கு மட்டுமே பயன்படுத்திட்டு இருக்காரு. தமிழ்நாடு பூராவும் நல்லதம்பி மேல ஆயிரக்கணக்குல கேஸ் இருக்கு.” என்று கூறினார். 

 


இந்த நல்லதம்பி அளித்த மோசடி புகாரால்தான், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி, பிறகு பிடிபட்டு சிறை சென்றார். ஜாமீனில் வெளிவந்தாலும், விருதுநகர் மாவட்டத்தைவிட்டு வெளியேற முடியாத நிபந்தனை, ராஜேந்திர பாலாஜியை முடக்கிப்போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


சார்ந்த செய்திகள்