
48ஆவது சென்னைப் புத்தகக்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 27ஆம் தேதி (27.12.2004 - வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணி அளவில் தொடங்க உள்ளது. இந்த புத்தகக்காட்சியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த புத்தகக்காட்சி ஜனவரி 12ஆம் தேதி (12.01.2025) வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்க உள்ளார்.
இந்த புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 17 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெற இருக்கிறது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து நூல்களுக்கும் அனைத்து அரங்கிலும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தொல்லியல்துறை, ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கின்றன. இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது. உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைகள் இடம் பெற உள்ளன. நிறைவு நாள் நிகழ்வில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர், மகாதேவன் விழா நிறைவுரை நிகழ்த்துகிறார்.
இதனையொட்டி தென்னிந்தியப் புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (09.12.2024) நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர், ‘நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொள்வாரா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பபாசி தலைவர் முருகன் பதிலளிக்கையில் “புத்தகக் காட்சிக்கு வாசகராக விஜய் வந்தால் வரவேற்கப்படுவார்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை சில ஊடகங்கள் புத்தகக்காட்சியை விஜய் தான் திறந்து வைப்பதாகச் செய்தியை திரித்து வெளியிட்டிருக்கிறது. புத்தகக் காட்சிக்கு விஜய் வரும் பட்சத்தில் வரவேற்பதாக மட்டுமே பபாசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புத்தகக் காட்சியைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தான் தொடங்கி வைக்க உள்ளனர் என பத்திரிகையாளர் சந்திப்பின் போதே தெளிவாக கூறப்பட்டது.