Vice Chancellor Conference chaired by the Governor Vice President participates

தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்களின் மாநாடு உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26ஆம் தேதிகளில் உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடர்ந்து 4வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து ஏப்ரல் 25 அன்று துணைவேந்தர்கள் மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார். தமிழ்நாடு ஆளுநரும், தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார். துணை வேந்தர்கள் மாநாட்டின் நோக்கமானது, தேசிய கல்விக்கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்லிசார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் திறன் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமர்வுகள் இம்மாநாட்டில் நடத்தப்படவுள்ளன.

Advertisment

கல்வித்துறை, அரசு மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் உரையாற்றவுள்ளார்கள். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரும் பேராசிரியருமான அஜய் குமார் சூட், ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார். இம்மாநாடு தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்களை ஒன்றிணைத்து பணியாற்றுவதையும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதையும், உயர்கல்விக்கான அணுகுமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் புதுமையான கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.