திருச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் இன்று பல்வேறு ஊழல்களையும், நிர்வாக சீர்கேடுகளையும், சட்டவிரோதமான செயல்களையும் கலைய தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் இன்று 4 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று திருச்சி மாவட்டம் சி.எஸ்.டி. கேண்டீன்களின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள், திருச்சி கோல்டன் பால்ம் கேண்டீன் குழுமத்தின் கீழ் இயங்கி வரும் முன்னாள் படை வீரர் சி.எஸ்.டி. கேண்டீன்களில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகள், சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து நாங்கள் கொடுத்த பல மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், மற்றும் துணை மேலாளர்கள் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்துகிறோம்.
இந்த கேண்டீன்களில் காலி அட்டைகளை எடுக்க 22.02.2022 அன்று ஏலதாரர்கள் தேர்வில் நடந்த முறைகேடுகளை கவனத்தில் கொண்டு நாங்கள் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஏலத்தை ரத்து செய்து மறு ஏலம் அறிவிக்க வலியுறுத்துகிறோம். இக்கேண்டீன்களின் சில ஊழியர்கள், உதவி மேலாளர்கள், மேலாளர் உதவியுடன் கடந்த பல வருடங்களாக திருட்டு இரசீதுகள் போட்டு எங்களுக்காக வரவழைக்கப்படும் பொருட்களை வெளிச் சந்தையில் விற்று இலாப பணத்தை இவர்கள் மத்தியில் பகிர்ந்து வருபவர்கள் குறித்து நாங்கள் கொடுத்த மனுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை இந்த கேண்டீன்களினுள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இந்த கேண்டீன் ஊழியர்களுக்கு DGR பரிந்துரைப்படி ஊதியம் வழங்கவும் இடமாற்றம் செய்துள்ள ஊழியர்களை மீண்டும் அவரவர் இடத்திற்கு இடமாற்றம் செய்யவும் வலியுறுத்துகிறோம். மேற்கூறிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த கேண்டீன் குழுமத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ஆகிய இ.எஸ்.எம். சி.எஸ்.டி.களின் முன் இதுபோன்ற கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.