Very heavy rain Orange alert for 5 districts 

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (21.11.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. அதே போன்று திருவாரூர், தஞ்சாவூர்,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.