ADVERTISEMENT

ராமஜெயம் வழக்கில் ஆதாரமான வெர்ஷா கார்; பிரபு கொலை குறித்து துருவும் போலீஸ் 

10:21 AM Dec 12, 2023 | kalaimohan

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது வரை விசாரணைகள் நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விசாரணை வளையத்திலிருந்த ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்ற பிரபாகரன். இவர் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இவர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த பகுதியில் பிரபல ரவுடியாகவும் இவர் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அலுவலகத்தில் இருந்த பொழுது முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் வந்த கும்பல், பிரபுவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலைச் சம்பவம் குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை தீவிரப் படுத்தப்பட்டு வரும் வேளையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை வளையத்தில் இருந்த ரவுடி பிரபு இன்று விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டது திருச்சி மாநகரை பரபரப்பாக்கியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் பிரபுவை பற்றி போலீசார் விசாரித்ததில் திருடப்பட்ட கார்களை விற்று வந்தது தெரிய வந்தது. ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக இருப்பது வெர்ஷா வகை கார். அந்த வெர்ஷா வகை காரை ஏற்கனவே பிரபாகரன் யாரிடமோ விற்றுள்ளார். இது தொடர்பாக பிரபுவிடம் சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரபுவை இன்று விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி இருந்தது. பிரபுவிடம் இருந்து காரை வாங்கிய கும்பல் அவரை கொலை செய்திருக்கலாம் என யூகங்கள் கிளம்பி இருக்கும் நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் முழுமையாக விசாரித்த பின்னரே முழு தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT