/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mathar-sangam-thenmoli.jpg)
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள புதுகூரைபேட்டை கிராமத்தில் நடைபெற்ற கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (25.09.2021) காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள சகஜானந்தா நகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வரவேற்று இனிப்புகள் வழங்கப்பட்டது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழி தலைமையில் மாதர் சங்கத்தினர் அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு இந்த வழக்கு குறித்து எடுத்துக்கூறி அதற்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பை வரவேற்று இனிப்புகளை வழங்கினர்.
பின்னர் இதுகுறித்து தேன்மொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கு, தமிழகத்தில் முதன்முதலில் பதியப்பட்ட சாதி ஆணவப்படுகொலை வழக்காகும். இந்த படுகொலை சம்பவம் காவல்துறைக்குத் தகவல் கிடைத்த பிறகும் கூட கண்ணகி முருகேசன் எரிந்து சாம்பலாகும் வரை விருத்தாச்சலம் காவல்துறை தடுப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக ஆரம்பத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யவும் மறுத்தது. இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தலித் அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு கடலூர் எஸ்.சி.எஸ்.டி வழக்குகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இத்தீர்ப்பு 18 ஆண்டுகளுக்குப்பின் காலதாமதமாக வழங்கப்பட்டிருந்தாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். இத்தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு வரவேற்கிறது.
தமிழகத்தில் சாதிய ஆணவப்படுகொலை செய்யும் சாதி வெறியர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இதுபோன்ற சாதிய ஆணவ படுகொலை வழக்குகளில் காலதாமதம் இல்லாமல் குறுகிய காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க அரசு முன்வர வேண்டும். சாதி ஆணவப்படுகொலையை தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களைப் பாதுகாப்பதற்கு மாவட்டங்கள் தோறும் சிறப்பு பாதுகாப்புப் பிரிவுகள் உருவாக்க வேண்டும். தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகின்றது என்றும் சட்டப்போராட்டத்தை 18 ஆண்டுகள் நடத்திய வழக்கறிஞர் ரத்தினத்திற்கு வாழ்த்துக்கள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)