vengaivayal issue DNA test for 4 people including the boy

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

இந்தச் சம்பவத்தில் இதுவரை 4 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு ஏற்கனவே டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறையூரைச் சேர்ந்த ஒரு சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர், வேங்கைவயலைச் சேர்ந்த இருவர் என மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனப் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Advertisment

இதனையடுத்து 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய கடந்த 6 ஆம் தேதி நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. அதேசமயம் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியவரிடம் மட்டும் உடல்நலனைப் பொறுத்துப் பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (12.10.2023) ஒரு சிறுவன் உட்பட 4பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதன் மூலம் வேங்கை வயல் விவகாரத்தில் இதுவரை 5 சிறுவர்கள் உட்பட 30 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.