ADVERTISEMENT

வேங்கை வயல் சம்பவம்; இடைக்கால அறிக்கை தாக்கல்

10:25 PM Sep 14, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ராஜ்கமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த ஆணையம் இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கங்கா பூர்வாலா, ஆதிகேசவலு அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சத்தியநாராயணன் ஒரு நபர் குழு, மூடி சீலிட்ட கவரில் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது. சிபிசிஐடி விசாரணையின் நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 191 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. சந்தேகப்படும் 25 நபர்களுக்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு பேரிடம் இரண்டு வாரங்களில் சோதனை நடத்தி முடிக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT