Skip to main content

'வேங்கை வயல் ஆடியோ உண்மை'-நீதிமன்றத்தில் அரசு உறுதி

Published on 28/01/2025 | Edited on 29/01/2025
VengaiVayal audio is true'-Government confirmed in court

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த சம்பவத்தில் மூன்று நபர்கள் அதில் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டதோடு அவர்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் வெளியாகி இருந்தது.

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம் வேங்கை வயலில் நடந்த மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் சம்பவத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. எனவே இது குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தது.

highcourt

இந்நிலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையான மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் '2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் உடனடியாக கைது நடவடிக்கை வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் 'வேங்கை வயல் விவகாரம் குறித்த முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேங்கை வயலில் சாதிய மோதலோ அரசியல் காழ்புணர்ச்சியோ கிடையாது. இருவருக்கு ஏற்பட்ட தனிமனித பிரச்சனை.  இரண்டு வருடங்களாக சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியான வீடியோ, ஆடியோக்கள் உண்மை. இதில் மூன்று நபர்கள் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்' என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை வைத்தார். அதனைத்  தொடர்ந்து இந்த வழக்கு நாளை விசாரணைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்