ADVERTISEMENT

’உயர்கல்வியில் உலக அளவீட்டை கடந்துள்ளோம்’– மத்தியரசை மறைமுகமாக தாக்கிய தமிழக அமைச்சர்

10:03 PM Oct 26, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT


வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 26ந்தேதி நடைபெற்றது. இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஷித் கலந்துக்கொண்டு பட்டங்களை வழங்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளங்களை பட்டப்பிரிவுகளில் 30,737 மாணவ மாணவிகளுக்கும், முதுகலை பட்டப்பிரிவுகளில் 6,305 மாணவ மாணவிகளுக்கும், ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 1696 மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் 39,371 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் பெற்றனர்.

ADVERTISEMENT


இவ்விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது, வேலூர் பழங்கால நகரங்களில் ஒன்று. பாலாற்றின் கரையில் அமைந்த அழகிய நகரம். பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பீஜப்பூர் சுல்தான் ஆகியோர் வேலூரை ஆண்டுள்ளனர். விஜயநகர பேரரசின் காலத்தில் வேலூர் நகரம் தலைமையிடமாக செயல்பட்டது. இந்தபகுதி ஆங்கிலேயர்களின் முக்கிய ராணுவ மையமாக இருந்தது. வேலூர் சிப்பாய் கலகம் வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இங்கு உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவர்க்கு பெருமை சேர்க்கும் வகையில் 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெருமை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே சேரும். 112 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் நீங்கள் பட்டம் பெறுவது உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற சிறப்பாகும். இப்பல்கலைக்கழகத்தை பொருத்தமட்டில் 7 முக்கிய துறைகளை உள்ளடக்கி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டத்தக்க ஒன்றாகும். இப்பல்கலைக்கழகத்தில் பசுமையை பேணும் வகையில் பல்வேறு மூலிகை செடிகள் நடப்பட்டு தற்போது பசுமை வளாகமாக பல்கலைக்கழகமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இவ்வளவு சிறப்புமிக்க இப்பல்கலைக்கழகம் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய பின்தங்கிய மாவட்டங்களைச் சார்ந்த மாணவ மாணவிகளின் உயர்கல்வி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது நான்கு மாவட்டங்களிலும் 130 கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளின் வாயிலாக ஏறத்தாழ 1,54,989 மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். திருவள்ளுவரின் பெயரில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் அனைவரையும் வாழ்த்துகின்றேன். இந்த பட்டங்களை பெறுவதற்கு நீங்கள் கடுமையாக உழைத்துள்ளீர்கள். அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல. விடாமுயற்சியினால் செய்யப்பட்டவைகளே என்பதை மட்டும் எப்போதும் மனதில் நிறுத்துங்கள். எண்ணங்கள் பெரிதாக இருந்தால் செயல்கள் பெரிதாக இருக்கும். செயல்கள் பெரிதாக இருந்தால் வாழ்க்கை உயர்வாக இருக்கும். இது திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது. இதை நாம் வாழ்வில் கடைபிடித்து வெற்றி காண வேண்டும்.


தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்பதனை இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய அளவில் தற்போது 903 பல்கலைக்கழகங்கள், 39050 கல்லூரிகள், 10011 தனிப்பாடக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 58 பல்கலைக்கழகங்கள், 2472 கல்லூரிகள் உள்ளன. புதிய புதிய கல்லூரிகளைத் தொடங்கியதின் காரணமாக உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்திலும் தமிழ்நாடு உயர்வான நிலையைப் பெற்றுள்ளது.


உயர்கல்வியில் சேர்ந்து பயில்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதாவது ஆண்களின் சேர்க்கை சதவிகிதம் இந்திய அளவில் 26.3 ஆகவும் தமிழ்நாடு அளவில் 49.1 ஆகவும் உள்ளது. பெண்களின் சேர்க்கை சதவிகிதம் இந்திய அளவில் 25.4 ஆகவும் தமிழ்நாடு அளவில் 48.2 ஆகவும் உள்ளது. தாழ்த்தப்பட்ட மாணாக்கர்களின் சேர்க்கை சதவிகிதம் இந்திய அளவில் 21.8 ஆகவும் தமிழ்நாடு அளவில் 42.1 ஆகவும் உள்ளது. பழங்குடி மாணாக்கர்களின் சேர்க்கை சதவிகிதம் இந்திய அளவில் 15.9 ஆகவும் தமிழ்நாடு அளவில் 40.5 ஆகவும் உள்ளது. மாணாக்கர்கள் சேர்க்கை விகிதத்தைப் பொருத்தவரை தற்போது இந்திய சராசரி 25.8 சதவிகிதமாகவுள்ளது. இதனை 2020-இல் 30 சதவிதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடு அதையும் தாண்டி, ஏன் உலக சராசரியான 36 சதவீதத்தையும் தாண்டி, வளரும் நாடுகளுக்கும் மேலாக இப்பொழுதே 2017-2018 ஆம் ஆண்டிலேயே 48.6 சதவிகிதம் பெற்றுள்ளது என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

கவர்னர் முன்பாகவே மத்தியரசின் உயர்கல்வித்துறையின் புள்ளிவிபரத்தை மறைமுகமாக தாக்கினார் அமைச்சர் அன்பழகன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT