Skip to main content

 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணியாளர் விபத்தில் சிக்கினார் - வேலூர் மருத்துவமனையில் அனுமதி

Published on 02/12/2018 | Edited on 02/12/2018
e

 

சென்னை டூ பெங்களுரூ தேசிய நாற்கர சாலையில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் டெக்னிஷியன் விபத்தில் சிக்கி புத்திசாலித்தனமாக மீண்டுள்ளார். 

 

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. அவர் தனது குடும்பத்துடன் டிசம்பர் 1ந்தேதி இரவு காரில் பெங்களூர் சென்று கொண்டிருந்தார். அவர்கள் வந்த கார் வேலூர் மாவட்டம்  ஆம்பூர் அடுத்த மின்னூர் என்ற இடத்தில் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி கிணற்றில் கவிழ்ந்து விழுந்தது.

 

e14

 

இரவு நேரம் என்பதால் யாரும் இதனை கவனிக்கவில்லை, பின்னால் வந்த வாகனங்கள் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுக்கொண்டுயிருந்தன. கார் கிணற்றில் விழுந்தது. காருக்குள் காயத்தோடு இருந்த சுந்தரமூர்த்தி தனது பாக்கெட்டில் இருந்த செல்போன் மூலமாக 108 ஆம்புலன்சை தொடர்புகொண்டு நடந்ததை கூறியுள்ளார்

உடனே ஆம்பூரில் இருந்து அப்போது சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடம் தெரியாமல் தேடியுள்ளனர். உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த ரோந்து போலீசார் மற்றும் ஆம்பூர் தாலுக்கா காவல்நிலைய போலீசார் கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த காரை தேடத்துவங்கினர். 

 

e

 

விடியற்காலை நேரத்தில் தங்களது ஊரில் போலிஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் இருப்பதை பார்த்து கிராம இளைஞர்கள் அந்த பகுதியில் திரண்டு விசாரித்துவிட்டு அவர்கள் சாலையோரம் உள்ள கிணற்றை தேடத்துவங்கினர். மின் விளக்கு இல்லாத இடத்தில் இருந்த அக்கிணற்றை கிராம மக்கள் உதவியுடன் கண்டுபிடித்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும் காவலர் சரவணன் ரோந்து போலீஸ் உதவி ஆய்வாளர் ரகுபதி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு கிணற்றில் இருந்த அவர்களை பத்திரமாக மீட்டனர்.

 

e

 

 

கிணற்றில் காரோடு உயிருக்கு போராடியதோடு, சமயோஜிதமாக 108க்கு போன் செய்தவர் நடிகர் ரஜினி நடித்து தற்போது வெளியாகி ஓடிக்கொண்டுள்ள 2.O படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்த சுந்தரமூர்த்தி என விசாரணையில் தெரியவந்தது. காரில் அவரது மனைவி மாயா அவரது குழந்தை கிரித்திஷ் ஆகியோரை பத்திரமாக மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் மின்னூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எந்திரன்’ கதைத் திருட்டு; விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய வழக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

enthiran movie story plagiarism case reached a critical stage

 

எனது கதையைத் திருடி இயக்குநர் ஷங்கர், ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த கிரிமினல் வழக்கு, இப்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

 

“என் கதையைத் திருடி ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களை வைத்து`எந்திரன்' திரைப்படத்தை எடுத்து, இயக்குநர் சங்கர் மோசடி செய்திருக்கிறார். இது காப்புரிமைச் சட்டப்படி கிரிமினல் குற்றம்'' என்று  2011-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் மீது ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், ‘நாங்கள் கதையைத் திருடவில்லை. இந்த வழக்கு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

 

இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த சிவில் வழக்கில், 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, “ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' சினிமாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது என்பதால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கைக் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம்” என்று அழுத்தமாகவே தெரிவித்திருந்தார்.  

 

enthiran movie story plagiarism case reached a critical stage
                                   ஆரூர் தமிழ்நாடன்

 

மேலும், அந்தத் தீர்ப்பில், `ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' படத்துக்குமான 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருந்தார் நீதிபதி. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் இயக்குநர் ஷங்கர். இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை' என்று சொல்லி இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை 2020 அக்டோபரில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் பின்னர் இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்ய, இதில் தமிழ்நாடன் தரப்பு மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்திருக்கிறது.

 

இந்த  நிலையில், இயக்குநர் ஷங்கர் மீது சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட எந்திரன் கதைத் திருட்டு வழக்கு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வழக்கு 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் ஆரூர் தமிழ்நாடனை, விசாரணை செய்ய வேண்டிய இயக்குநர் ஷங்கரின் வழக்கறிஞர் சாய்குமார், மேலும் வாய்தா கேட்டு, வழக்கை ஒத்திவைப்பதிலேயே குறியாக இருந்தார். இதற்கு தமிழ்நாடனின்  வழக்கறிஞர் வயிரவ சுப்பிரமணியன் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடனிடம் விசாரணையை அன்றே நடத்தி முடிக்கும் படி நீதிபதி உத்தரவிட, இதைத் தொடர்ந்து ஆரூர் தமிழ்நாடனிடம் இரண்டுமணி நேரத்திற்கு மேல் கேள்வி கேட்டு பதில்களைப் பெற்றார் சாய்குமார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து, இயக்குநர் ஷங்கரை நீதிமன்றத்திற்கு அழைத்து, விசாரணை நடத்த ஆரூர் தமிழ்நாடன் தரப்பு தயாராகி வருகிறது.

 

 


 

 

Next Story

விறுவிறுப்பாக எதிர்பார்க்கப்படும் வழக்கு! - டைரக்டர் ஷங்கர் நாளை ஆஜராவாரா?

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

ddd

 

இயக்குநர் ஷங்கர், தனது கதையைத் திருடி, அதை மூலக்கதையாக்கி, ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை வைத்து ‘எந்திரன்’ படத்தை எடுத்ததாகக் குற்றம்சாட்டி, கவிஞரும், நக்கீரன் இதழின் முதன்மை துணை ஆசிரியருமான ஆரூர் தமிழ்நாடன், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

10 ஆண்டுகளுக்கும் மேலாக  இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்தாளர் தரப்பு ஆஜரானபோதும், வழக்கம் போல் டைரக்டர் ஷங்கரோ, அவர் தரப்பு வழக்கறிஞர்களோ ஆஜராகவில்லை. 

 

இதனால் நீதிமன்றம் டைரக்டர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததாக நீதிமன்ற வெப்சைட்டிலேயே செய்தி வெளியானது. இதனால் இயக்குநர் தரப்பு பெரும் மன உளைச்சலுக்கு ஆளானது. பின்னர் இரண்டு நாள் கழித்து, ‘டைரக்டர் ஷங்கருக்கு அனுப்பப்பட்டது பிடிவாரண்ட் அல்ல, நீதிமன்ற அழைப்பாணைதான்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் இயக்குநர் தரப்பு நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

 

இந்த நிலையில் டைரக்டர் ஷங்கர் மீதான கதைத்திருட்டு வழக்கின் விசாரணை, நாளை (19 பிப்.) தொடங்கும் என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. டைரக்டர் ஷங்கர்  நீதிமன்றம் அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது. எனவே நாளை டைரக்டர் ஷங்கர் ஆஜராவாரா? என்ற கேள்வி பலமாக எழுந்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை விரைந்து நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கோலிவுட் வட்டாரத்தைப் பரபரப்பாக்கி இருக்கிறது.


- நமது நிருபர்