Skip to main content

மோடி அரசின் சனாதன தர்மத்தைப் பேணத்தான் தமிழில் தேர்வெழுதத் தடை போட்டாரா துணைவேந்தர்? வேல்முருகன் கண்டனம்

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
velmurugan tvk


தமிழில் தேர்வெழுத தடை போட்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்! இதனை எதிர்த்து அறவழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வெறித்தாக்குதல்! மோடி அரசின் சனாதன தர்மத்தைப் பேணத்தான் தமிழில் தேர்வெழுதத் தடை போட்டாரா துணைவேந்தர் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இருமொழிக் கொள்கை மற்றும் சமூக நீதிக்கு வேட்டுவைக்கும் துணைவேந்தரை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழில் தேர்வெழுதத் தடையை உடனடியாக நீக்குமாறும் மாணவர்கள் மீது போட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெறுமாறும்  தமிழக அரசை வலியுறுத்துகிறோம்!
 

 

தமிழ்நாடு பின்பற்றும் அறிவார்ந்த இருமொழிக் கொள்கைப்படியான தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்வெழுதும் நடைமுறையை மாற்றி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என அண்மையில் அறிவிப்பு செய்தார் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன். அதோடு வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்படும் தண்டக் கட்டணத்தையும் பலமடங்கு உயர்த்தினார்.
 

 

இது அப்பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அடித்தட்டுப் பிரிவு மாணவர்களுக்கு எதிரான கொடூர, உள்நோக்கமுடைய நடவடிக்கையாகும். இதனால் படிப்பை பாதியிலேயே விட வேண்டிய அவலத்திற்குத் தள்ளப்படுவர். இதை உணர்ந்த மாணவர்கள், துணைவேந்தர் பாஸ்கரனின் தன்னிச்சையான இந்த முடிவைத் திரும்பப்பெறுமாறு இரண்டு மாதங்களாக முறையீடு, விண்ணப்பம், பேச்சுவார்த்தை என முயன்றுபார்த்தும் பலன் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ந் தேதி அய்ந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஒன்றுகூடி பல்கலைக்கழகத்தின் முன்பு அமைதியாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த துணைவேந்தர் காவல்துறையை ஏவ, அவர்கள் மாணவர்கள் மீது வெறித்தாக்குதல் நடத்தினர். ஆவேசத்துடன் தடியடி நடத்தினர். மாணவர்களின் சட்டையைப் பிடித்துக்கொண்டு தரதரவென இழுத்து வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர். மாணவிகள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு, மாணவர்கள் 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்தனர்.
 

தமிழுக்குத் தடை போடும் துணைவேந்தரின் தன்னிச்சையான முடிவு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கைக்கே எதிரானது என்றால், தங்கள் உரிமைக்காக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை அவர் ஏவியது அரசமைப்புச் சட்டத்திற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குமே எதிரானது.
 

கல்வி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாத விதத்தில் துணைவேந்தர் நடந்துகொண்டுள்ளார். எந்தத் துறையைத் தேர்வு செய்திருக்கிறோமோ அது சார்ந்த அறிவைப் பெற்றிடத்தான் கல்வி; அதைத் தாய்மொழி வாயிலாக எளிதாகப் பெற்றிட இயலும்; பிற மொழி என்றால் அந்த மொழியே குறுக்குச் சுவராக நின்று தடுக்கும். எனவேதான் தமிழில் தேர்வெழுத விழையும் மாணவர்களைத் தடுக்கக் கூடாது என்கிறோம். ஆனால் இதெல்லாம் தெரிந்துதான் இப்படி ஒரு முடிவை  துணைவேந்தர் எடுத்திருப்பாரானால், அது மோடி அரசின் சனாதன தர்மத்தைப் பேணும் நோக்கில்தான் எனக் குற்றம் சாட்டுகிறோம்.
 

நாட்டின், மக்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வழிகாட்ட வேண்டிய கல்வி நிலையங்கள், இப்படி பிற்போக்குத்தனமான, புராணீக, பாசிச, சனாதன இழிவைத் திணிக்கும் பணியில் ஈடுபடுவதை அறிவார்ந்த தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை உடனடியாக இதில் கவனம் செலுத்தி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வெழுத விதித்திருக்கும் இந்தத் தடையை உடைத்தெறிய வேண்டும். தேவைப்பட்டால் அதற்கு புதிய ஆணையே வெளியிட வேண்டும். தமிழ்நாடு தழுவிய கிளர்ச்சி வெடிக்குமுன் இதைச் செய்ய வேண்டும்.
 

இருமொழிக் கொள்கை மற்றும் சமூக நீதிக்கு வேட்டுவைக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரனின் தன்னிச்சையான இந்த முடிவை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழில் தேர்வெழுதத் தடையை உடனடியாக நீக்குமாறும் மாணவர்கள் மீது போட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெறுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்