Skip to main content

போலீசாரின் துன்புறுத்தலால் வேல்முருகனின் சிறுநீரகங்கள் பாதிப்பு: வைகோ குற்றச்சாட்டு!

Published on 31/05/2018 | Edited on 31/05/2018


போலீசாரின் துன்புறுத்தலால் வேல்முருகனின் சிறுநீரகங்கள் பாதிப்படைந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வேல்முருகனை கைது செய்து பாழடைந்த மண்டபத்தில் தங்க வைத்து கொடுமை செய்தது. பின்னர் தூத்துக்குடியில் இருந்து அழைத்து வரும்போது குடிநீர்கூட வழங்காமல் காவல்துறை கொடுமைப்படுத்தி உள்ளது. அதிமுக அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையின் மூலம் அடக்குமுறை வழக்கை ஏவியுள்ளது.

மத்தியில் ஆளும் மோடி அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அதிமுக அரசின் பாசிச போக்கை எதிர்த்து, தமிழக உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த வேல்முருகன் மீது இந்த அடக்குமுறையை ஏவிய தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
 


என் மீதும் தேச துரோகக் குற்றச்சாட்டில் 2 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளையும் அஞ்சாமல் எதிர்கொள்வோம்; வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கையும் எதிர்கொண்டு முறியடிப்போம். இந்தநடவடிக்கையால் வேல்முருகன் மேலும் வீறுகொண்டு களத்துக்கு வருவார். கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்ற நிலைமைக்கு அதிமுக அரசு ஆளாகும் என எச்சரிக்கிறேன்.

தமிழ் நாட்டிற்கு எது நன்மையோ, எது தேவையோ அதை செய்ய பாடுபட்டு கொண்டு இருக்கிறோம். முறையான வளர்ச்சிக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. சுற்றுச் சூழல் எங்கு மாசுப்பட்டாலும், தமிழர் உரிமை பறிக்கப்பட்டாலும் அதற்காக போராடுவோம். வரும் காலங்களில் தமிழகத்தில் குழந்தைகள் நன்கு வளர வேண்டும்.

தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்தால் ராஜ துரோகம் என்பதா? தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் இந்தியாவின் ஒற்றுமை சிதறும் என்பது ராஜதுரோகமா? தேச துரோக வழக்கை உடைத்து கொண்டு வேல்முருகன் வருவார். இது அடக்கு முறையை பிரயோகிக்கிற முறை.

இதில் மத்திய அரசின் அழுத்தம் இருக்கிறது. இவர்கள் மீது வழக்கு போடு. உள்ளே போடு என்று அழுத்தம் கொடுக்கிறது. இதற்கு கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுக அரசு காவல்துறையை ஏவி உயிர்களை பலி கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்