Velmurugan insists TN govt should exert sufficient pressure

டெல்லியில் 'மதராசி கேம்ப்' பகுதியில் வசித்த தமிழர்களின் வீடுகள் இடக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி ஜங்புராவில் மதராஸி கேம் பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்றி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. டெல்லி நிஜாமுதீன் ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் மூன்று தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு, அம்மாநில பாஜக அரசால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Advertisment

இவ்வழக்கில், தமிழ்நாட்டிலிருந்த வந்தவர்கள் தங்கியிருக்கும் மதராஸி முகாமில் உள்ள கட்டங்களை ஜூன் 1ஆம் தேதி இடித்துத் தள்ளுமாறு, டெல்லியின் பொதுப் பணித்துறைக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் கடந்த மே 9ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 60 ஆண்டுகளாக தமிழர்கள் வசித்து வந்த ஜங்புராவில் மதராஸி கேம்பில் இருந்த குடியிருப்புகளை, அம்மாநில பாஜக அரசு இடித்து அகற்றி வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட தமிழர்கள் கைகளில் கிடைத்த பொருட்களோடும், கண்ணீருடனும் வெளியேறி வருகின்றனர். இவர்களுக்கு, சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரேலாவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான குடியிருப்புகளில் அடுக்குமாடி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், அந்த வீடுகளின் உள்கட்டமைப்பு, வசிக்கத் தகுதியற்றதாக இருக்கிறது.

Advertisment

அதுமட்டுமின்றி, நகருக்கு வெகு தூரத்திற்கு மாற்றப்படும் போது மதராசி கேம்ப்பில் இருந்த தமிழர்கள் உயிருக்கு ஆபத்தானது என அஞ்சுகின்றனர். அதாவது, அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளையர்களும், ரவுடிகளும் அதிகமாக இருப்பதால், பொருள்களுக்கு பாதுகாப்பு இல்லை. மதராஸ் முகாமில் தான் அம்மக்களுக்கான ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளது. மேலும், இவர்கள் மதராஸ் கேம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கூலி வேலைகள் செய்து வரும் நிலையில், வெகு தூரத்தில் உள்ள நரேலாவிற்கு மாற்றும் போது, வேலை வாய்ப்பின்றி பொருளாதார ரீதியாக சிக்கல்கள் நிலைகளுக்கு தள்ளப்படுவார்கள்.

நரேலாவில் ஒதுக்கப்படும் புதிய வீடுகள் வெடிப்புகள், நீர் கசிவு, பாதுகாப்பற்ற நிலையில் கட்டுமானத் தோல்விகளால் நிரம்பியுள்ளது. இதனால் இந்த தமிழ் குடும்பங்களை இதுபோன்ற அபாயத்திற்கு தள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களது குழந்தைகள் தற்போது அருகேயுள்ள லோதிகாலணி போன்ற தமிழ் பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்கள் படிப்பு, தொழில்களை இழந்ததால் இந்த குடும்பங்கள் கடுமையான பொருளாதார சிரமங்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

Advertisment

எனவே, மதராஸ் முகாமில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களின் நலன் கருதி, மதராஸ் முகாமிற்கு அருகிலேயே பாதுகாப்பான குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும். இதுகுறித்து, டெல்லி அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். மதராஸ் கேம்பில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள் விரும்பும் பட்சத்தில், தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் பூர்விக பகுதியில் குடியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.