Advertisment

“மும்மொழி கல்வி கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என்பது  மாநில அரசின் உரிமை” - வேல்முருகன் 

Velmurugan condemns Union Minister Dharmendra Pradhan

இந்தித் திணிப்பிற்கு எதிரான மொழிப்போர் தமிழ்நாட்டில் மீண்டும் வராமல் தடுக்கும் பொறுப்பு, ஒன்றிய பாஜக அரசுக்கு இருக்கிறது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் தலைமையில், திமுக எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டு, பிறகு யாரோ ஒரு சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எதிர்ப்பதாக, மக்களவையில் 10.03.2025 அன்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். அதோடு, தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்றும் அவர் பேசியிருக்கிறார்.

Advertisment

புதிய கல்விக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? அல்லது மும்மொழி கல்வி கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்வது அந்தந்த மாநிலங்களின் உரிமையே தவிர, டெல்லியில் அமர்ந்து கொண்டு ஒன்றிய அரசோ, அதன் எஜமானர்களோ முடிவு செய்யக்கூடாது. தமிழ்நாட்டில் படிக்கின்ற மாணவர்களுக்கு என்ன படிக்க வேண்டும். என்ன மொழி கற்க வேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களிலேயே, தங்களின் தாய் மொழி அழிந்து கொண்டிருப்பதாக - இந்தி அதனை அழித்துக் கொண்டிருப்பதாக - அவர்களின் தலைவர்களே சொல்கிறார்கள். மராத்தியத்தில் அந்தக் குரல் இப்போது வெளிப்படையாக கேட்கத் தொடங்கி இருக்கிறது.

மேற்கு வங்கத்தில், பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ், வங்கம் தொன்மையான மொழி, அதனை விட்டுவிட்டு வங்காளிகள் இந்தியில் பேசலாமா என்று கேட்டிருக்கிறார். வடநாட்டில் போஜ்புரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மொழிகளை இந்தி அரித்துக் கொண்டும், அழித்துக் கொண்டும் இருக்கிறது. இதுபோன்ற ஆபத்து தமிழ்நாட்டிற்கு வந்து விடக்கூடாது என்ற பேரச்சத்தில், புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதனை புரிந்துக் கொள்ளாமல், யாரோ ஒரு சூப்பர் முதல்வர் என்றும் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்றும் தர்மேந்திர பிரதான் கூறுவது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடிகளை கொள்ளையடித்துச் செல்லும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு 20 ஆயிரம் கோடிகளை கூட வழங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டின் வரியில் தின்று கொளுத்து விட்டு, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்தித் திணிப்பிற்கு எதிரான மொழிப்போர் தமிழ்நாட்டில் மீண்டும் வராமல் தடுக்கும் பொறுப்பு, ஒன்றிய பாஜக அரசுக்கு இருக்கிறது என்பதை தர்மேந்திர பிரதானுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுவதோடு, தமிழ்நாட்டிற்கு சூப்பர் முதல்வர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

velmurugan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe