Advertisment

“அறவழியில் போராடியவர்களைக் கைது செய்வது ஏற்புடையதல்ல..” - வேல்முருகன்  

 Velmurugan about kallakurichi school issue

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., திருச்சி சத்திரம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி இறந்ததற்கு நீதி கேட்டு அந்த மாணவியின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆரம்பத்தில் அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மெத்தனப் போக்கினால் போராட்டம் வன்முறையாக மாறிவிட்டது. வன்முறை நடந்த பின்னர் தான் அங்கு கலெக்டர், கல்வி அதிகாரி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.

Advertisment

உண்மையில் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதலில் தற்கொலைக்கு தள்ளப்பட்டாரா? மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார் என்றால் அந்த சிசிடிவி பதிவினை ஏன் வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். காவல்துறையினர் சகட்டுமேனிக்கு எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் மாணவியின் இறப்புக்கு குரல் கொடுத்தவர்களை கைது செய்து 17 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பது ஏற்புடையது அல்ல.

Advertisment

வன்முறையில் ஈடுபட்டவர்கள், பொருட்களை சூறையாடி தூக்கி சென்றவர்கள் ஆகியோரை இனம் கண்டு கைது செய்யுங்கள். மாணவியின் இறப்பில் மர்மம், சந்தேகங்கள் நிறைய இருக்கிறது. தமிழகத்தில் பல பள்ளிகள் முதன்மை கல்வி அலுவலரே நுழைய முடியாத அளவுக்கு அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களாக இருக்கின்றன. இது போன்ற கல்வி நிறுவனங்களை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் தான் மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளி கூட்டமைப்பு நடத்திய போராட்டம் காரணமாக தமிழகத்தில் 987 பள்ளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

kallakurichi police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe