/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/velmurugan11.jpg)
கஜா புயலால் தாக்குண்ட 7 மாவட்டங்கள் இயல்பு நிலை இழந்துள்ளன; மக்களின் வாழ்நிலையே அங்கு நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது; இதனால் மாணவர்களுக்கு மனதளவிலும் பாதிப்பு; போட்டித் தேர்வுகள் எதற்கும் அவர்கள் தயாராக முடியாத இக்கட்டான சூழல்! எனவே வரும் 25ந் தேதி தொடங்கவிருக்கும் தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வினை கால நீட்டிப்பு செய்து தள்ளிவைக்குமாறு தேர்வாணயத்தையும் அரசையும் வலியுறுத்துகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்.
இது குறித்த அவரது அறிக்கை: ‘’தமிழ்நாடு வனத்துறையில் வனவர், வனக்காவலர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர் என மொத்தம் 1178 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவு 15-10-2018 முதல் 05-11-2018 வரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வனவர் பணிக்கான தேர்வுகள் 25-11-2018ல் தொடங்கி 28-11-2018 வரை நடைபெறும்; வனக்காவலர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர் பணிகளுக்கான தேர்வுகள் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (Hall Ticket) 18-11-2018 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரியவருகிறது.
விண்ணப்பிக்கும் நாள் தொடங்கி தேர்வு தொடங்கும் நாள் வரைக்குமான 40 நாள் இடைவெளிதான் தேர்வுக்குத் தயாராவதற்குக் கொடுக்கப்பட்ட கால அளவு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக குறைந்தபட்சம் 90 நாட்கள் அவகாசம் வழங்குவதுதான் வழக்கமாக இருந்துவரும் நடைமுறை. எனவே மிகக் குறைந்த கால அளவான இந்த 40 நாட்கள் மாணவர்களுக்குப் பத்தாது என்பதுதான் உண்மை.
இந்த நிலையில், கஜா புயல் வேறு வந்து தாக்கி 7 மாவட்டங்கள் இயல்பு நிலை இழந்துள்ளன; மக்களின் வாழ்நிலை அங்கு கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது; இதனால் குறிப்பாக மாணவர்களுக்கு மனதளவிலும் பாதிப்பு; போட்டித் தேர்வுகள் எதற்கும் மாணவர்கள் தயாராக முடியாத இக்கட்டான சூழல் இது!
ஆனால் தேர்வு தொடங்கும் நாள் வரும் 25ந் தேதி என்பதால் இன்னும் ஐந்தே நாட்கள்தான் உள்ளன. கஜா புயலால் நிலைகுலைந்துபோயிருக்கும் மாணவர்களால் இந்த 5 நாட்களுக்குள் எதுவும் செய்ய முடியாது. வாழ்வாதாரத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கும் அவர்களால் இந்த ஒருசில நாட்களுக்குள் தேர்வுக்குத் தயாராவதென்பது நடக்காத காரியம் மட்டுமல்ல, இயலாத காரியமுமாகும்.
எனவே தேர்வினை கால நீட்டிப்பு செய்து தள்ளிவைப்பதுதான் கையறு நிலையில் இருக்கும் இந்த மாணவர்களுக்குச் செய்யும் உபகாரமாக இருக்க முடியும்.
கால நீட்டிப்பு செய்து தேர்வினைத் தள்ளிவைப்பது என்பதற்கு முன்னுதாரணம் இல்லாமலில்லை. 2015ல் ஒக்கி புயல் வந்தபோது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
அவ்வளவு ஏன்? கஜா புயல் பாதிப்பு காரணமாக இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்புக் கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன; டிசம்பர் 15ந் தேதி அத்தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனவே வரும் 25ந் தேதி தொடங்கவிருக்கும் தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வினையும் கால நீட்டிப்பு செய்து தள்ளிவைத்து, கஜா புயலால் தாக்குண்ட மாணவர்களுக்கு உதவுமாறு தேர்வாணயத்தையும் தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!’’
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)