Skip to main content

காவிரி விவகாரம்: சட்டத்தையும் ஜனநாயகத்தையும் எட்டி உதைக்கும் மோடி அரசு! - வேல்முருகன் கண்டனம்!

Published on 11/03/2018 | Edited on 11/03/2018


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விடயத்தில் பகிரங்கமாகவே சட்டத்தையும் ஜனநாயகத்தையும் எட்டி உதைத்திருக்கிறது ஒன்றிய மோடி அரசு. நீதிமன்றத் தீர்ப்பையே புரட்டி, கர்நாடகாவுக்கு சாதகமாக வரட்டு வாதம் பேசியிருக்கிறார் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகச் செயலர். இதனை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இதில் தமிழகம் செய்ய வேண்டியதைத் தீர்மானிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டுமாறு அரசை வலியுறுத்துகிறது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டெல்லியில் நேற்று காவிரி தொடர்புடைய 4 மாநிலப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசியிருக்கிறார் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகச் செயலர். இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்; அதாவது, மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களையோ எம்பிக்களையோ அழைக்காமல் மக்களுக்கே தொடர்பில்லாத அதிகாரிகளை அழைத்து, ஒன்றிய அரசு சார்பிலும் அமைச்சர் யாரும் இல்லாமல் அதிகாரியே இதைச் செய்து, இப்படிப் பேசியுமிருக்கிறார் அவர்.

அப்போது, ’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் எங்கும் சொல்லப்படவில்லை’ என்று மன உறுத்தலே இல்லாமல் கூசாமல் பேசியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெளிவாக இருக்கையில், அதனைப் புரட்டி, கர்நாடகாவுக்கு ஆதரவாக வரட்டு வாதம் புரிகிறார் என்றால், மோடி அரசின் உள்நோக்கத்தையே அவர் எதிரொலித்திருக்கிறார்.

முதலில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பு தெளிவாக இருக்கையில், 4 மாநிலப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? நீர்வளத்துறைப் பொறுப்பை வகிக்கும் அமைச்சரான நிதின் கட்கரியே, முதன்முதலாக, அதுவும் சென்னையில் வைத்தே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தற்போது வாய்ப்பில்லை என்று ஏன் சொல்ல வேண்டும்?

6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; அதுவரை காத்திருப்போம் என்கிறார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டச் சொல்கிறது முதன்மை எதிர்க்கட்சி. இதெல்லாம் அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவின்படியாக இருக்க முடியாது. முறைப்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி அதில்தான் அடுத்த நடவடிக்கையைத் தீர்மானிக்க வேண்டும்.

எனவே 4 மாநிலப் பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அழைத்து கட்டபஞ்சாயத்து செய்வதற்கு ஒப்பாக வரட்டு வாதம் பேசிய ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதில் தமிழகம் அடுத்து செய்ய வேண்டியதைத் தீர்மானிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்