Skip to main content

'அரசியலுக்கு வா' என அழைக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் ரஜினி பெயரில் பொங்கல் உதவி வழங்கும் ரஜினி மன்றம்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

'நான் அரசியலுக்கு வரவில்லை 'என கடந்த மாதம் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினி அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும்மென ரசிகர்களின் ஒருப்பிரிவினர் போராட்டம் நடத்த முடிவு செய்ய, அதனை மன்ற பொறுப்பாளர் சுதாகர் வேண்டாம் என வேண்டுக்கோள் விடுத்தார்.

 

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்கிற அறிவிப்பு, மன்ற பொறுப்பாளரின் வேண்டுக்கோள் போன்றவற்றை மீறி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்மென அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்த வாரத் தொடக்கத்தில் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்துக்கு பின் மீண்டும் இல்லை என உறுதியான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.

 

அரசியல் கட்சி தான் கிடையாது, ஆனால் பொதுத்தொண்டு வழக்கம் போல் மன்றத்தின் சார்பில் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். அரசியல் கட்சியில்லை என்றதும் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் சோர்வடைந்த நிலையில், சில மாவட்டங்களில் ரசிகர் மன்றத்தினர் சோர்வடையாமல் தொடர்ந்து சேவைப்பணியை செய்ய துவங்கியுள்ளனர்.

 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழாவினை முன்னிட்டு 100-க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு பொங்கல் அரிசி, புடவை, வேட்டி, துண்டு, கரும்பு, இனிப்பு என மாவட்ட தலைவர் சோளிங்கர் ரவி வழங்கினார். இந்த விழா சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

 

கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நடைபெற்ற இந்தவிழாவில் நூற்றுக்கும் அதிகமான பயனாளிகளுடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

 

ரசிகர் மன்றத்தின் ஒருப்பகுதியினர் 'அரசியல் களத்துக்கு வா தலைவா' என அழைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், வேலூர் மாவட்ட ரசிகர் மன்றத்தினர், உங்கள் விருப்பமே எங்கள் விருப்பம் என முடிவு செய்து அரசியலுக்கு வா என அழைக்காமல் வழக்கம் போல், பொங்கல் வாழ்த்து தெரிவிக்கவும், இல்லாத வரிய நிலையில் உள்ள மக்களுக்கு ரஜினி பெயரில் உதவும் பணியை செய்ய துவங்கியுள்ளது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டுக்கே குடும்ப அட்டை வந்து சேரும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Minister Chakrapani says that if you apply online, the ration card will reach your home

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், புதிய திட்டப் பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற 2024-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பாக, பச்சரிசி 1 கிலோ (மதிப்பு - ரூ. 35.20), சர்க்கரை ஒரு கிலோ (மதிப்பு ரூ. 40.61), கரும்பு ஒன்று (மதிப்பு ரூ. 33.00) என மொத்தம் மதிப்பு ரூ.108.81 மற்றும் ரொக்கம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆக ஒரு பரிசுத் தொகுப்பின் மொத்த மதிப்பு ரூ.1108.81 ஆகும். தமிழகம் முழுவதும், 2,14,30,587 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.2,376.22 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6,79,414 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.75.33 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் 1004  நியாய விலைக் கடைகளில் 6,46,259 குடும்ப அட்டைதாரர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 19 நியாய விலைக் கடைகளில்  22,572 குடும்ப அட்டைதாரர்கள், மகளிர் சுய உதவிக்குழு 12 நியாய விலைக் கடைகளில் 10,705 குடும்ப அட்டைதாரர்கள் என 1035 நியாய விலைக் கடைகளின் மூலமாக மொத்தம் 6,79,414 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இன்றைய தினம் பொருளூர் ஊராட்சி, மரிச்சிலம்பு ஊராட்சியில் பூணம்பட்டி, புளியம்பட்டி ஊராட்சியில் புளியம்பட்டி, தும்பலப்பட்டி ஊராட்சியில் தும்பலப்பட்டி, தொப்பம்பட்டி ஊராட்சியில் தொப்பம்பட்டி, கீரனூர் பேரூராட்சியில் கீரனூர், மேல்கரைப்பட்டி ஊராட்சி மேல் கரைப்பட்டி, கோரிக்கடவு ஊராட்சியில் கோரிக்கடவு, அக்கரைப்பட்டி ஊராட்சியில் நரிக்கல்பட்டி, மானூர் ஊராட்சியில் மானூர் தாளையூத்து ஊராட்சியில் தாளையூத்து, புஷ்பத்தூர் ஊராட்சி புஷ்பத்தூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

பொருளூர் ஊராட்சி, பொருளூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வெள்ளத்தடுப்பணை, சிமெண்ட் சாலை, வண்ணக்கல், சிறுபாலம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்கு தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற 30 மாதங்களில் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடிமைப் பொருட்களை பெறுவதற்காக நீண்ட தூரம் சென்று சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே குடிமைப் பொருட்களை பெற்று பயன்பெறும் வகையில், புதியதாக நியாய விலைக் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  

நியாய விலைக் கடைகளில் கை ரேகை பதிவு மூலம் பொருட்கள் பெறுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க தற்போது கண் கருவிழி பதிவு மூலம் பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 36,000 நியாய விலைக் கடைகளில் கண்கருவிழி பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக 4 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமிக்கும் வகையில் செமி குடோன்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. 

முருங்கை விவசாயிகளை மேம்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் முருங்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை கண்டறிந்து, ஊக்குவிக்கும் வகையில் சட்டமன்ற தொகுதிகள் தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமையவுள்ளது. அதேபோல் கேதையறும்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது” என்று கூறினார்.

Next Story

பொங்கல் தொகுப்பு; ஆழ்வார்பேட்டையில் துவக்கி வைத்த முதலமைச்சர்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024

 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2 ஆம் தேதி (02.01.2024) தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5 ஆம் தேதி (05.01.2024) பரிசுத் தொகுப்புடன் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலை பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிடும் வகையில், கடந்த 7ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வரும் 13 ஆம் தேதி (13.1.2024) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அதே சமயம் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 14 ஆம் தேதி (14.1.2024) வழங்கிடவும், பொங்கல் திருநாளுக்கு முன்னதாகத் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதே சமயம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று காலை ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.