Skip to main content

வேலூரில் மீண்டும் வடமாநில கொள்ளையர்களா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

வேலூர் மாநகரம், காட்பாடி பகுதிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து செல்போன் கடைகளில் திருடு போய்க்கொண்டுள்ளன. இதனை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தடுமாறி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

 

Vellore incident

 



அதில், வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் காட்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட செல்போன் கடைகளில் சமீபத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். அதில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150க்கும் மேற்பட்ட செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் வடநாட்டு கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

அதற்கேற்ப சம்பவ பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பவம் நடைபெற்ற அந்த நேரத்தில் சந்தேகத்துக்குரிய வட மாநிலத்தவர்கள் சுற்றித்திரிவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. படத்தில் உள்ளவர்களைப் பார்க்கும்போது பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இப்போது வெளியிடப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய நபர்களை வேலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் யாரேனும் பார்த்திருந்தாலோ, இப்போது பார்த்தாலோ உடனடியாக கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளின் எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகவல் கொடுக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும். தவிர, அவர்களுக்குக் காவல்துறை தரப்பில் தக்க சன்மானமும் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, வேலூர் சரக துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் - 94982 10143, காட்பாடி சரக துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன் - 94981 05993, வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் - 94981 09959, காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் - 94981 11427 ஆகிய தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வடமாநில கொள்ளையர்களா என வேலூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்