Skip to main content

திமுகவிலிருந்து விலகிய கவுன்சிலர் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Vellore city councillor who resigned from DMK released an audio

வேலூர் மாநகராட்சி 27வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சதீஷ்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து திடீரென விலகிக் கொள்வதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘‘அரசியலுக்கு வந்ததில் இருந்து தேவையில்லாத பிரச்சனைகளும், தேவையில்லாத விமர்சனங்களும் என்னை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. நான் எதைச் செய்தாலும் ‘அது தவறு’ என்று சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், தேவையில்லாத விரோதமும் உருவாகிறது. எல்லோரும் ஒரு விஷயத்தை கேட்பார்கள். அதையே நான் கொஞ்சம் வேகமாக கேட்பேன். நான் நார்மலாக பேசுவதே அப்படித்தான். ஆனால், நான் கோபப்படுவதாக பலர் நினைக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள நினைக்கின்றேன். வேறு எந்தக் கட்சியிலும் போய் சேரமாட்டேன்.

எதிர்காலத்தில் பொறுமையும், அனுபவமும் வந்தால் அரசியலுக்கு வருகிறேன். கடைசி வரை பக்குவம் வராவிட்டால் அரசியலுக்கு வரவே மாட்டேன். இப்போதைக்கு மக்கள் பிரதிநிதியாக என் வார்டு பணிகளை மட்டுமே கவனிக்க விரும்புகிறேன். இது என் சொந்த முடிவு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.