Skip to main content

கொள்ளையடிக்கும் வீடுகளில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள திருடர்கள்!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் வசித்து வருபவர் தவுசீப் அஹமத். இவர் ஆம்பூரில் உள்ள தனியார் காலனி தொழிற்சாலையில் உற்பத்தி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். செப்டம்பர் 3ந்தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற இவர் மாலை அலுவலகத்திலிருந்து சென்னைக்கு சென்றுள்ளார். இதனால் இவரது மனைவி ஃபாத்திமா ஜொஹரா நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய இரண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு காதர்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். செப்படம்பர் 4ந்தேதி காலை அங்கிருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

 

p

 

காலை வழக்கம் போல் வீட்டில் வேலை செய்யும் பெண் வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடித்துள்ளார். சத்தம் ஏதும் வராததால் வீட்டில் யாரும் இல்லை என்று திரும்பியபோது கதவு திறந்த நிலையில் இருந்ததும், அங்கே பூட்டப்பட்டிருந்த பூட்டு கீழே விழுந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகில் உள்ள தவுசீப் அஹமத் தாய் வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் தவுசீப் அஹமத் தந்தை அல்தாப் அஹமத் மற்றும் அவரது உறவினர்கள் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.

 

வீட்டுக்குள் இருந்த பீரோக்களை உடைத்து அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை அடித்தும், சமையல் அறையில் குளிர் சாதனை பெட்டியில் வைத்திருந்த  சாக்லேட் மற்றும் குளிர்பானத்தை சோஃபாவில் அமர்ந்து சாவகாசமாக குடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.  

 

இது தொடர்பாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டவர்கள், தடய நிபுணர்களை வரவைத்து கைரேகைகளை எடுத்துள்ளனர். மேலும் புகார் வாங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

கடந்த சில தினங்களாக வாணியம்பாடி நகர  பகுதிகளில் பூட்டிய வீடுகளை கொள்ளையர்கள் நோட்டமிட்டு கொள்ளை அடிப்பதும், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கும் இருசக்கர வாகனங்களை திருடி செல்வதும் தொடர்கதையாக உள்ளது. இந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அதேநேரத்தில் கொள்ளையர்கள் திருடிக்கொண்டு செல்வதோடு, அந்த வீடுகளில் சமைத்து சாப்பிடுவது அல்லது சமைத்திருப்பதை சாப்பிட்டுவிட்டு செல்வது என செய்கின்றனர். இது தொடர்ச்சியாக இப்பகுதிகளில் திருடப்படும் அனைத்து வீடுகளிளும் நடக்கிறது. இந்த திருட்டில் கூட வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் குழந்தைகளுக்காக வைத்திருந்த சாக்லெட், குளிர்பானம், பழங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டே சென்றுள்ளனர்.

இந்த வித்தியாசமான கொள்ளையர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க துவங்கியுள்ளனர் போலிஸார். 

சார்ந்த செய்திகள்