Skip to main content

கொடியேற்றத்துடன் தொடங்குகிறது வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

pic_4.jpg

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்தள்ளது புனித ஆரோக்கிய மாதா பேராலயம். தமிழ் மக்களின் மத நல்லிணக்கத்திற்கு சான்றாகவும், அனைத்து மதத்தினரும் வந்துசெல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இருக்கிறது வேளாங்கண்ணி மாதா பேராலயம்.

 

இந்தப் பேராலாயத்தின் ஆண்டு பெருவிழா, ஒவ்வொரு ஆண்டும் அகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதிவரை விமரிசையாக கொண்டாடப்படும். செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் தேர் பவனியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். 

 

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (29.08.2021) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியைப் புனிதப்படுத்தி ஏற்றிவைக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் தலைமையில் திருப்பலி பூசை நடைபெறுகிறது.

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

மேலும், பேராலயம் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச் உள்பட 19 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திற்குச் செல்லவும் கடற்கரைக்குச் செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னொளியில் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Velankanni Cathedral glows  in festival

 

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம் காண்போர் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆக.29 தொடங்கியது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் முகாமிட்டு ஆரோக்கிய அன்னையை தரிசனம் செய்வதற்காகக் குவிந்துள்ளனர்.

 

பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம், நடுத்திட்டு, மாதாகுளம், பழைய வேளாங்கண்ணி, விண்மீன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. குறிப்பாக வேளாங்கண்ணி பேராலய கோபுரங்களில் அனைத்திலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு, அழகுற ஒளிர்வது காண்போர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் கொடியேற்றத்தைக் காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நடைப் பயணமாக வேளாங்கண்ணியை நோக்கி வரும் நிலையில், ஏராளமானோர் சிறிய ரதங்களை மின் விளக்கு அலங்காரத்துடன் வடிவமைத்து அவற்றில் மாதா சொரூபத்தை வைத்து இழுத்து வருகின்றனர்.

 

 

Next Story

வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Special buses run to Velankanni
கோப்புப்படம்

 

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா வருடந்தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்குத் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 28.08.2023 முதல் 09.09.2023 வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதா கோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

 

அதேபோன்று மேற்கண்ட ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் திரும்பச் செல்ல வேளாங்கண்ணியில் இருந்தும் 28.08.2023 முதல் 09.09.2023 வரை இரவு மற்றும் பகல் என எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பாக இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாகச் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர். எனவே இச்சிறப்பு பேருந்து சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.