
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், துரைக்கண்ணு மகன் வினோத்குமார் (வயது 28). ஓட்டுநரான இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் மோட்டார் வாகன நிதி நிறுவனத்தில் கடன்பெற்று 2 டாடா ஏ.சி.இ வாகனங்களை வாங்கி ஓட்டியுள்ளார். போதிய வருமானம் கிடைக்காததால் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த இரு வாகனங்களையும் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்று 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.
இந்த நிலையில், வினோத்குமாரிடம் பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற இரு வாகனங்களையும் தனியார் நிதிநிறுவனத்தின் நிர்வாகம் ஏலத்தில் விற்பனை செய்துவிட்டனர். ஆனால், அதன் பிறகு கடன் தொகையைவிட குறைந்த தொகைக்கே வாகனங்கள் விற்பனை செய்துள்ளதாகக் கூறி மீதி தொகையை செலுத்தக் கோரி கடந்த ஒரு வாரமாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வினோத்குமார் வீட்டிற்குச் சென்று மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, கரோனா ஊரடங்கால், வருமானம் இல்லாமல் இருந்ததால்,கடன் நிலுவைகட்டுவதில் சிக்கல் வந்ததாகக் கூறியதை தனியார் நிதி நிறுவன ஊழியர் ஏற்கவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட வினோத்குமார் நேற்று காலை விஷம் குடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, வாகன ஓட்டுநர்கள் கூறும் போது, கரோனா ஊரடங்கால் எங்கள் வாழ்க்கை அடிமட்டத்திற்கு போய்விட்டது. அன்றாடம் உணவுக்கே தடுமாறும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில், ஃபைனான்ஸ் நறுவனங்கள் கடனை கட்டச் சொல்லி டார்ச்சர் கொடுக்கிறார்கள். எந்த வருமானமும் இல்லாமல் எப்படி நாங்கள் கடன் கட்ட முடியும். அரசு சில மாதங்கள் வசூல் செய்யக்கூடாது என்று சொன்னாலும் எந்த ஃபைனான்ஸ் ஊழியர்களும் கேட்கவில்லை. நீங்கள் தவணை செலுத்தினால் தான் எங்களுக்குச் சம்பளம் கிடைக்கும் என்று வீட்டுக்கே வந்து உட்கார்ந்து விடுகிறார்கள். மற்றொரு பக்கம் ஓட்டாத வாகனங்களுக்குச் சாலை வரி. இப்படிப் பல வகையிலும் டார்ச்சர் தாங்க முடியாமல் ஓட்டுநர்கள் இருப்பதாகக் கவலை தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)