Advertisment

பகலில் காய்கறி விற்பனை! இரவில் திருட்டுத் தொழில்! 

Vegetable sales during the day! Theft at night!

Advertisment

பகலில் காய்கறி விற்பனை செய்வதுபோல் வீடுகளை நோட்டமிட்டுவிட்டு இரவு நேரங்களில் திருடும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் திருட்டுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் தொடர்ச்சியாக மாடுகள் திருடு போவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனடிப்படையில் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உத்தரவின் பேரில்,குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான போலீசார்விருத்தாசலம் ஜங்சன் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாட்டா ஏசி வாகனத்தில், மாடுகளை ஏற்றி வந்த நபர்களை விசாரணை செய்ததில், முன்னுக்குப்பின் முரணாகக் கூறியதால் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர். அவ்விசாரணையில் அவர்கள் இருவரும் வடலூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன், ராமச்சந்திரன் என்பதும் பகலில் காய்கறி விற்பனை செய்வதுபோல் வீடுகளை நோட்டம் விட்டு, இரவில் மாடுகளை திருடுகிறவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து, 1லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களைத் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து திருட்டுக்காக பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏஸ் வாகனம் மற்றும் ரூ. 97 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இரண்டு மாடுகளையும் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய குற்றப்பிரிவைச் சேர்ந்த சரவணன், செல்வகுமார், சௌமியன், தினேஷ், செல்வகுமார் உள்ளிட்டோருக்கு காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe