Vegetable market expansion at a cost of Rs.29 crore

தென்னிந்தியாவிலேயே இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட்டாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் திகழ்கிறது.

Advertisment

காந்தி காய்கறி மார்க்கெட் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் அதிகளவில் தாங்கள் விளைவித்த காய்கறிகளை ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்கெட்டிற்கு கொண்டு வந்து விலை நிர்ணயம் செய்து விற்பது வாடிக்கை.

Advertisment

இங்கிருந்து காய்கறிகள் தினமும் சுமார் 1000 டன் அளவில் தமிழ்நாடு உட்பட கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புனே, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, அதன்மூலம் தினமும் சுமார் ரூ.5 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தற்போது பெருகி வரும் நவீனக் காலத்திற்கு ஏற்ப கட்டிடம் விரிவாக்கம் செய்வதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் தீவிர முயற்சியால் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் ரூ.29 கோடி செலவில் இந்த சந்தை நவீனமயமாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டு, தற்போது அதிநவீன வசதிகளுடன் வியாபாரிகளுக்கான கடைகள், உணவகம், போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வாகனங்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழி, வாகனம் நிறுத்துமிடம், வங்கி சேவை, ஏ.டி.எம். மையம், காவல் உதவி மையம், நிழற்குடை, குடிநீர் சேவை, மழைநீர் வாய்க்கால், கழிப்பறை வசதி, வெளியூரிலிருந்து வந்து செல்லும் விவசாயிகள் தங்கிச் செல்வதற்காகத் தங்கும் விடுதிகள், தடையில்லா மின்சார வசதி, அன்றாட சேகரமாகும் மார்க்கெட் குப்பைகளை நவீன எந்திரங்கள் வசதியுடன் தினமும் சுத்தம் செய்யும் வசதி உள்ளிட்ட அம்சங்களோடு தற்போது மார்க்கெட்டுக்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.