
அறந்தாங்கியில் கரோனா காலத்திலும் வாங்கிய பணத்திற்கு வட்டியைக்கேட்டு மிரட்டியதால் தள்ளுவண்டி காய்கறிக் கடைகாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மிரட்டிய இருவர் மீது அறந்தாங்கி போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இது போன்ற கொடூர செயல்கள் தொடரவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) பாலகிருஷ்ணன் (45)அறந்தாங்கியில் தள்ளுவண்டி மூலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காக அறந்தாங்கி மூக்குடியைச் சேர்ந்த அக்பரிடம் இருந்து சில மாதங்களுக்கும் முன்பு மணிகண்டன் ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டியும் ஒவ்வொரு மாதமும் செலுத்தி உள்ளார்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலினால் அரசு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. பல இடங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்ததாலும் காய்கறி வியாபாரம் பாதிக்கப்பட்டதால் கடந்த 3 மாதங்களாக வட்டி செலுத்த முடியவில்லை.
இது குறித்து அக்பர் மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோர் வட்டி கேட்டு மணிகண்டனை அடிக்கடி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பலமுறை பதில் சொல்லியும் தொடர்ந்து மிரட்டப்பட்டதால் மனஉளைச்சல் அடைந்த மணிகண்டன், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து மணிகண்டன் மனைவி வீரம்மாள் கொடுத்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அக்பர், ஆறுமுகம் ஆகிய 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், வங்கிக் கடனுக்கான வட்டியைக்கூட தாமதமாகச் செலுத்தலாம் என அரசே அறிவித்துள்ள நிலையில் வட்டியைக் கேட்டு தற்கொலைக்கு தூண்டிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்தனர். பின்னர், இருவரையும் கைது செய்வதாக போலீஸார் உறுதி அளித்ததால் உறவினர்கள் சடலத்தைப் பெற்றுக் கொண்டனர்.
கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வங்கி, நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன் தொகை மற்றும் வட்டியை சில மாதங்களுக்கு வசூலிக்கக் கூடாது என்று அரசு தடை விதித்திருந்தாலும் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த கரோனா கொடூரத்தால் அடுத்தடுத்து உயிர்பலிகள் தொடங்கி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த போலிசார் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்களோ?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)