
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா காலமானார்.
வீரபாண்டி ராஜா தனது பிறந்தநாளையொட்டி, தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுத் திரும்பும் போது மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவர் உடனடியாக சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே, உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, உடல் அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
மறைந்த வீரபாண்டி ராஜா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் ஆவார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வீரபாண்டி ராஜா தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்தார்.
தனது பிறந்தநாளில் வீரபாண்டி ராஜா உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.