Skip to main content

வீராணம் ஏரிப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்?

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

ddd

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் லால்பேட்டையில் இருந்து வீராணம் ஏரியின் நீண்ட கரை துவங்கி, சேத்தியாத்தோப்பு வரை நீண்டு செல்கிறது. திருசின்னபுரம் ஊரை ஒட்டிச் செல்கிறது. இதன் அருகில் ஏரி கரையோரம் தண்ணீரில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து அருகில் உள்ள புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த ஆணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா? யாராவது கொலை செய்து இங்கே கொண்டுவந்து ஏரி தண்ணீரில் வீசிச் சென்றார்களா? இப்படிப் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இறந்தவரின் உடலில் அரைக்கால் பேண்டும் பனியனும் அணிந்திருந்தார். இது குறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவரின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் வீராணம் ஏரியில் ஆண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

சென்னைக்குத் தண்ணீர் அனுப்பத் தடை!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Veeranam Lake dried up without water supply, so forbidden to send water Chennai

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியாகும். மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரம் இதுவே ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஏரிக்கு மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரை கீழணையில் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மேலும் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளாக அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்யும் மழை காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்தடையும். இந்த நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 71 கன அடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்போது ஏரி வறண்டு குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. அதாவது நீர் மட்டம் 38.20 அடியாக உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பிட மாற்று ஏற்பாடுகளைச் செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கோடையை சமாளிக்க சென்னைக்கு என்எல்சி சுரங்க நீரை வாலாஜா ஏரியில் எடுக்கவும், வடலூர் முதல் பண்ருட்டி வரை உள்ள 100க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்களில் தண்ணீர் எடுக்கவும், நெய்வேலி சுரங்க நீரை லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கவும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.