ADVERTISEMENT

மலைபோல் வரும் மணல் சிக்கல் நீதிமன்றத்திடம் சிக்கிய வீரமணி - தப்பிக்க முடியுமா?

08:30 AM Sep 17, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக மா.செ- வுமான கே.சி.வீரமணி வீடு, அலுவலகம், கல்லூரி, ஹோட்டல், அவரது உறவினர்கள் வீடு, பினாமிகளின் வீடுகள் என 35 இடங்களில் செப்டம்பர் 16 ஆம் தேதி ரெய்டு நடத்தியதாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது. அதில் பணம் 34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தங்கம் 5 கிலோ பறிமுதல் என்றும், அமெரிக்கா டாலர் 1.8 லட்சம் பணம், 9 உயர்ரக கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த அறிவிப்பில் கடைசியாக 275 யூனிட் மணல் பதுக்கி வைத்திருந்ததாகவும் அதனையும் பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன் மதிப்பு 30 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பாலாற்றில் மணல் கொள்ளை என்பது பல ஆண்டுகளாக நடந்துவந்தது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆறுகளான வைகை, தாமிரபரணி போன்றவற்றில் மணல் அள்ளப்பட இதனைக் கண்டித்து நூற்றுக்கணக்கான போராட்டங்களை அரசியல் கட்சிகள், சமூகநல இயக்கங்கள், சமூகநல ஆர்வலர்கள் நடத்தினார்கள். உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கலானது. அதன்படி தமிழக ஆறுகளில் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அந்த தடையை நீக்க பல்வேறு முயற்சிகளை அப்போது ஆட்சியிலிருந்த எடப்பாடி தலைமையிலான ஆட்சியாளர்கள் செய்தனர் தடையை நீக்க முடியவில்லை.

நீதிமன்றத்தின் தடையை மீறுவது என்பது தமிழகத்தில் சாதாரணமானது, அதிலும் அதிமுகவினர் நீதிமன்ற உத்தரவுகளை காலில் போட்டு மிதிப்பது என்பது தமிழக வரலாறு. அந்த வகையில் பாலாற்றில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கடந்தகால அதிமுக ஆட்சியாளர்களும், அதிமுக நிர்வாகிகளும் அள்ளினார்கள். அதிலும் குறிப்பாக அமைச்சர் வீரமணி இரவு நேரங்களில் தங்களது டிப்பர் லாரிகள் மூலமாக 15 யூனிட், 20 யூனிட் என மணல் நிரப்பிக்கொண்டு கர்நாடகாவில் விற்பனை செய்கிறார் எனக் குற்றம்சாட்டினர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அவரது வாகனங்கள் சிக்கியும் அதிகாரத்திலிருந்ததால் அதன்மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. வருவாய்த்துறை, காவல்துறைக்குத் தெரிந்தே நீதிமன்ற தடையை மீறி பாலாற்று மணல் கடத்தல் நடந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தலின்போது கூட தங்கு தடையின்றி மணல் கடத்தினார் வீரமணி என்கிற தகவல் உண்டு. அதேபோல் அவரது கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் அதிகமான யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது, காவல்துறை, வருவாய்த்துறைக்குத் தெரிந்தும் அதிமுக மீதான விசுவாசத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பேசப்பட்டுவந்தது.

இன்று செப்டம்பர் 16 ஆம் தேதி நடந்த ரெய்டில் சட்டவிரோதமாகக் குவித்து வைக்கப்பட்ட மணலையும் கணக்கில் கொண்டுவந்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த விவகாரம் பெரும் சட்டச் சிக்கலை முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு ஏற்படுத்தும் எனக்கூறப்படுகிறது. காரணம், சட்டப்படி தமிழகத்தில் மணல் விற்பனை கிடையாது, தமிழ்நாட்டுக்கு அருகிலுள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் மணல் அள்ளத்தடையுள்ளது. அதனால் இந்த 275 யூனிட் மணல் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி சட்டப்படி எழுகிறது. இதற்கு வீரமணியால் பதில் சொல்ல முடியாதநிலை வரும் எனத்தெரிகிறது.

வெளிநாட்டு மணல் விற்பனையின்போது முன்பே வாங்கி வைத்திருந்தேன் என்றால் அதற்கான ஆவணங்களைத் தரவேண்டிய நிலை ஏற்படும். காரணம் மணல் விற்பனை முழுக்க முழுக்க ஆன்லைன் வழியாக அப்போது நடந்தது. தற்போதைய நிலையில் போலியாக ஆவணங்களைத் தயாரித்தாலும் காட்டிக்கொடுத்துவிடும். நீதிமன்ற உத்தரவை மீறி மணல் திருடப்பட்டுள்ளது என்கிற வாதத்தை எதிர்த்தரப்பு முன்வைக்கும்போது வீரமணிக்கு மணலால் பெரியளவில் சிக்கல் வரும் என்கிறார்கள் சட்டம் தெரிந்தவர்கள். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது கிராமத்துப் பழமொழி. பல ஆண்டுகளாக நடந்த மணல் கொள்ளையில் சிக்காத வீரமணி தற்போது மணல் கடத்தலைத் தற்காலிகமாக நிறுத்தியபோது சிக்கியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT