
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.
காப்புக் கட்டியதும் ஒவ்வொரு வீட்டிலும் ஆண்கள், பெண்கள் என குடும்பத்தினர் விரதம் இருந்து மண் சட்டிகள், எவர்சில்வர், பித்தளை உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள் வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வருவர். வந்த முளைப்பாரியை குடியிருப்பு வாரியாக தாரை தப்பட்டைகள் முழங்க வான வேடிக்கைகளுடன் கும்மியடித்து கிராம மக்கள் நேற்று ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித் திடலைச் சுற்றி ஒன்று சேர்ந்து கல்லணை கரையோரம் உள்ள பெரிய குளத்தில் கும்மி அடித்து பிறகு தண்ணீரில் விட்டனர்.
மேலும் முளைப் பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்ட பிறகு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அடுத்த வாரம் புதன்கிழமை மாலை மது எடுப்புத் திருவிழா நடக்கிறது.