மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதன் கூட்டமைப்புகள் திட்டமிட்டிருக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்,'' பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்த்தும், லாபத்தில் இயங்கக் கூடிய நிறுவனங்களைக் கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைத்தும் வருகின்றனர். இந்த போக்கை கண்டிக்கும் வகையில் பொது வேலைநிறுத்தம் அகில இந்திய அளவில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கட்சியின் தொழிற்சங்க அமைப்புகளும், அரசு ஊழியர்கள் அமைப்புகளும் பங்கேற்கின்றன. பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும்'' என்றார்.