
ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்தப் பிறந்தநாள் நிகழ்வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச் செல்வன் MLA, ரவிகுமார் MP, முதன்மைச் செயலாளர்கள் உஞ்சை அரசன், ஏ.சி. பாவரசு, தலைமை நிலைய செயலாளர்கள் பாலசிங்கம், தகடூர் தமிழ்செல்வன், இளஞ்சேகுவேரா, துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, ஆளூர் ஷாநவாஸ் MLA, எஸ்.எஸ். பாலாஜி MLA, ஊடக மைய முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு MLA உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு அவர்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், “சமுதாயத்திற்காக தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் எழுச்சித் தமிழரை சிறுபான்மையின மக்கள் சார்பாகவும், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள் முதல்வர் ஸ்டாலின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான், “திருமாவளவனின் கருத்துகளை எங்களைவிட ஆழமாக யாராலும் சொல்லவிட முடியாது. வீரமிக்க தமிழனாக திருமா திகழ்வது பேரானந்தத்தைத் தருகிறது. சனாதனம் என்னும் சொல்லை திருமாவைவிட உரத்தக் குரலில் எதிர்த்தவர் எவருமில்லை. தமிழர்களின் மானத்தை எழுச்சி பெறச் செய்யும் அவர், நீடித்து வாழ வேண்டும். திருமாவளவனின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் முதல் வாய்ப்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று பேசினார்.
சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், “52 ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஈடுபட்டுவருகிறேன். பல தலைவர்களைப் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். திருமாவளவன் இன்று பெரும் தலைவராக உயர்ந்திருக்க நானும் காரணமாக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியாவில் இன்று நல்ல தலைவர்களுக்குத்தான் மிகப்பெரிய பஞ்சமாக உள்ளது. கசக்கின்ற கருப்பை இன்று கவர்ச்சிகரமான கருப்பாக மாற்றி வைத்திருக்கிறார் திருமாவளவன்.

தமிழ்ச் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்கள் அதிகாரம் பெற வேண்டும். அதன் முதல் தளபதியாக தம்பி திருமா வர வேண்டும். அது விரைவில் நடக்கும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். ஆதிக்க வெறி எங்கே இருந்தாலும் அதை தடுத்து நிறுத்தி, இங்கே உங்கள் பருப்பு வேகாது என்று சொல்லுவோம்” என்று பேசினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “50 ஆண்டுகளில் மக்களுக்குப் புரியவைக்க வேண்டியதை 5 ஆண்டுகளில் செய்யக்கூடியவர் திருமாவளவன். சரித்திரத்தைத் திருப்பி போடுபவர் திருமா. உங்களை எப்போதும் தோளில் தூக்கி சுமக்க நாங்கள் இருக்கிறோம். சமத்துவத்தை சரித்திரமாக்குங்கள்” என்று பேசினார்.
கவிஞர் கபிலன், தனது வாழ்த்தை கவிதையாக வடித்தார்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
இந்த நாலும் இரண்டும்
நமக்கு உறுதி
குளித்துக்கொண்டிருந்த தாமரை
குளத்திலே தற்கொலை
செய்துகொண்டது
அவர்களுக்குப் பல்லக்கு தூக்க
நான்கு எம்.எல்.ஏ.க்கள்
அதிகாரத்தில்
அரிதாரம் பூச
நமக்கு நான்கு
எம்.எல்.ஏ.க்கள்
நான் படிச்சா
உனக்கென்ன
போடா டேய்
வெளக்கெண்ண
தேநீர் விற்றவர்
தேசத் தந்தை என்றால்
செருப்பு தைத்தவர்
தேவாரம் பாடக்கூடாதா
என்று கவிதையில் வாழ்த்து தெரிவித்தார்.

திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், “திருமாவளவன் நாற்காலியில் உட்காருவதுதான் அவர்களுக்கெல்லாம் பிரச்சனை. அதனால்தான் அவர் உட்காருவதையே பிரச்சனையாக்குகிறார்கள். தன் கருத்தைப் பிறர் மனம் கோனாமல் பேசும் தலைவன் திருமாவளவனை தவிர வேறு யாரும் இல்லை. தோல்வியைத் தன் மீது ஏற்றுக்கொள்வதும், வெற்றியைத் தொண்டனுக்கு கொடுப்பதுமான ஆற்றலில் பேரறிஞர் அண்ணாவை போல பார்க்கிறேன் திருமாவை. அண்ணாவின் இடத்தை ஸ்டாலின் நிரப்புகிறார். கலைஞரின் இடத்தை திருமாவளவன் நிரப்புகிறார். காலத்தைத் தாண்டி சிந்திக்கும் தலைவன் திருமா, காலம் தாண்டி நீடுழி வாழ வேண்டும்” என்று தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏற்புரை வழங்கிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், “இந்த ஆண்டிற்கான பிறந்தநாள் கருப்பொருள், ‘சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை’. இந்தக் கருப்பொருளைக் கொண்டு தமிழகம் முழுவதும் ஒருமாத காலத்திற்கு கருத்தியல் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

தலித், பழங்குடி மக்கள் மட்டுமில்லை, இட ஒதுக்கீட்டைப் பெறும் அனைவரும் சமூகநீதி சமூகம்தான். யார் வேண்டுமானாலும் நமக்கு எந்த அடையாளத்தை வேண்டுமானாலும் கொடுக்கட்டும். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளின் ஒரே அடையாளம் ஜனநாயக சக்தி, சமத்துவ சக்தி. சமத்துவம் என்கிற கோட்பாட்டை நோக்கி பயணிக்கும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
மோடியும், அமித்ஷாவும் ஓ.பி.சி. பிரிவினர்தான். அவர்களை வைத்தே ஓ.பி.சி. பிரிவினருக்கு சவக்குழி தோண்டுகிறது ஆர்.எஸ்.எஸ்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை வெல்ல நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து முழக்கங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, விசிக தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.