
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பாக இன்று சென்னை வடக்கு காவல் ஆணையரிடம் பாஜகவின் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்திரி ரகுராம் மற்றும் பா.ஜ.க கல்யாணராமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் காஸி, “வி.சி.க.வின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலும், இரண்டு சமூகத்தினர் மத்தியில் அமைதியைக் கெடுத்து கலகம் விளைவிக்கும் நோக்கத்திலும், தொல்.திருமாவளவன் பட்டியல் இனத்தவரைச் சார்ந்தவர் என்பதை நன்கு அறிந்து அவருக்கு எதிராக அவதூறு, வன்மம், தனிமனிதத் தாக்குதல், உயிருக்கு அச்சுறுத்தல், செய்திகளைத் தவறாகப் புனைவது, எழுதுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிற பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்திரி ரகுராம் மற்றும் பா.ஜ.க கல்யாணராமன் ஆகியோர் மீது உரிய ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட மனுக்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வரப்படுகிறது.
குறிப்பாக கடந்த 12.08.2020. அன்று எங்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் த. பார்வேந்தன் ஆணையரை நேரில் சந்தித்து உரிய ஆவணங்களுடன் பா.ஜ.க கல்யாணராமன் மீது கொடுத்த புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் மேற்சொன்னவர்கள் மீதும் குறிப்பாக கல்யாணராமன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் தற்போது இந்த மனுவை ஏற்றுக்கொண்டு மேற்சொன்ன பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.