புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள பனையப்பட்டி காவல் சரகம் உதயசூரியன்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 54). இவர் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட விசிக தொண்டரணி அமைப்பாளரான இவர் ஆம்னி பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (17.07.2025) தனது வீட்டில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரது மனைவி தனலெட்சுமி தனது உறவினர்களுக்கும் பனையப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பனையப்பட்டி போலீசார் சண்முகநாதன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு விசாரணை செய்தனர்.அப்போது சண்முகநாதன் வீட்டிற்கு வெளிநபர்கள் யாரும் வந்து சென்றதாகத் தெரியவில்லை. இந்நிலையில் அவரது மனைவி தனலெட்சுமியிடம் விசாரணை செய்தனர். 

அதுவரை அமைதியாக இருந்தவர் போலீசாரிடம் கூறும் போது, “தனது கணவர் இரவு நேரங்களில் குடிபோதையில் ரொம்பவே டார்சர் செய்தார். பொறுக்க முடியாமல் கம்பியால் அடித்ததில் அவர் இறந்துவிட்டார். இதனை மறைக்க யாரோ என் கணவரை அடித்துக் கொன்றதாக போலீசாருக்கு தகவல் சொன்னேன்” என்று கூறியுள்ளார். இந்த விசாரணையைத் தொடர்ந்து கணவனைக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.