கேரளாவில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. கேரள மக்களின் துயரத்தில் பங்கேற்கும் விதமாக ரூபாய் 25 லட்சம் உதவி வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 10 லட்சம் நிதியாகவும் ரூபாய் 15 லட்சம் பொருட்களாகவும் வழங்கப்படும்.

Advertisment

இதுகுறித்து மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

மழைவெள்ள பாதிப்பில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு மொழி, இனம், மதம் கடந்து பல்வேறு தரப்பினரும் உதவ முன்வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. கேரள மாநிலத்தின் கோரிக்கையை ஏற்று மிகத்தீவிரமான இயற்கைப் பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். எனினும், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள உதவி போதுமானதல்ல. குறைந்தபட்சம் ஐந்தாயிரம் கோடி ரூபாயாவது நிதியுதவி அளிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

கர்நாடகாவிலும் கேரளாவிலும் பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பொழிந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு பருவ மழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisment