Skip to main content

தேசிய கட்சியாக மாறும் விசிக?

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
vck about becoming a national party

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கக் காங்கிரஸ் கட்சியும் படுதீவிரமாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு  திமுக, காங்கிரஸ், விசிக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். மற்றொரு புறம் பாஜக என்.டி.ஏ கூட்டணி என்ற பெயரில் பல கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது. 

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தமிழகத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட திமுக தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  அந்த 4 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை விசிக தலைவர் திருமாவளவன் டெல்லி சென்றுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பானை சின்னம் ஒதுக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

அதன் பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “நாடாளுமன்றத் தேர்தலில் விசிக போட்டியிடவுள்ளோம். அதனால் எங்களுக்குப் பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதற்காக நாங்கள் தேர்தல் ஆணையத்தை அணுக வந்தோம்; ஆனால் முன் அனுமதி பெறவில்லை என்பதால் எங்களால் தேர்தல் ஆணைய அதிகாரிகளைப் பார்க்க முடியவில்லை. அதற்கான தனிப் பிரிவில் எங்களைக் கோரிக்கையை மனுவாக சமர்ப்பித்துள்ளோம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 5 தென்மாநிலங்களில் விசிக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளோம். அதனால் விசிகாவிற்கு சுயேட்சை சின்னத்திலிருந்து பானை சின்னதை பொது சின்னமாக முன்கூட்டியே அதனை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கான மனுவை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு; அது சுதந்திரமாக செயல்பட வேண்டும்.  விருப்பு வெறுப்பு இன்றி , ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி செயல்பட வேண்டும்” என்றார். 

விசிக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்களா அல்லது பானை சின்னத்தில் போட்டியிடுவார்களா என்று கேள்விக்கு, “கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 6 தொகுதிகளிலுமே பானை சின்னத்தில் நின்றோம். அப்போது திமுக எங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொல்லி எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்கவில்லை. ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த மாதிரி சொன்னார்கள்; அப்போது வெற்றியைக் கருத்தில் கொண்டு மட்டுமே அந்தமாதிரி கூறினார்கள்” என்று பதிலளித்தார். 

சார்ந்த செய்திகள்