/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kc_1.jpg)
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான எச்.வசந்தகுமார் நேற்று முன்தினம் (28/08/2020) மாலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இதையடுத்து, எச்.வசந்தகுமார் எம்.பி.யின் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வசந்த் & கோ நிறுவன ஊழியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வசந்தகுமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு, எச். வசந்தகுமாரின் உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வசந்தகுமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து வசந்தகுமாரின் உடல் அவரின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றன.
அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள வசந்தகுமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.சி.வேணுகோபால், "மனிதநேய பண்பாளர், சமூக அக்கறை மிக்கவர், மிகச்சிறந்த பாராளுமன்றவாதி, காங்கிரஸ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். எம்.பி., எச். வசந்தகுமாரை இழந்துவாடும் குடும்பத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு, இன்று (30/08/2020) காலை 10.00 மணிக்கு எச். வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)