Skip to main content

விவசாயிகளுக்கு ஆதரவாக மழையிலும் தொடர்ந்த சாலை மறியல்...

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

Various political party supports farmers puthukottai

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று முழுமையாகக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புதுக்கோட்டை நகரில் திமுக கூட்டணி கட்சியினர் மற்றும், வழக்கறிஞர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியினர், பல்வேறு தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் உள்ளிட்டவற்றை சேர்ந்தவர்கள் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மாவட்ட பொறுப்பாளர் நியாஸ் தலைமையில் விவசாயாக் கருவிகளுடன் சென்று உழவர் சந்தையில் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கீரமங்கலத்தில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க, எஸ்.டி.பி.ஐ மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாயச் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டம் செய்யாமல் களைந்து போகக் கோரி ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், மற்றும் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் மழையிலும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

 

Various political party supports farmers puthukottai

 

அதே போல கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் செங்கோடன் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் ஏர்கலப்பைகளுடன் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் கீரமங்கலம் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.  சாலை மறியல் நடந்த இடங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

இதே போல அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், கறம்பக்குடி, ஆலங்குடி, பொன்னமராவதி, விராலிமலை, திருமயம், கீரனூர் உள்பட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

 

 

சார்ந்த செய்திகள்