Skip to main content

பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது

Published on 14/06/2020 | Edited on 14/06/2020
virudhachalam




கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம். இவர் தனது வீட்டின் முன்பு கடந்த ஜனவரி மாதம் 30 ஆம்  தேதி தனது பைக்கை நிறுத்திவிட்டு வீட்டிற்கு தூங்க சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் முன் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்தார்.  


இதேபோல் விருத்தாசலம் கடைவீதியில் 5 மாடி கட்டிடம் முன்பு நின்றிருந்த வாகனம் மற்றும் விருத்தாசலம் கடைவீதி நான்குமுனை சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த மொபட் வண்டி, உள்ளிட்ட 8 வண்டிகள் மற்றும் இரண்டு பைக்குகளை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். 


மேலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வந்த காரணத்தால், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி இளங்கோவன் அறிவுறுத்தலின்படி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கணேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் குமரேசன், தலைமை காவலர்கள் சௌமியன், சரவணன், செல்வகுமார், தினேஷ் சத்யா, வைத்தியலிங்கம், தனசேகரன், விமல் ஆகியோர் கொண்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 


இந்நிலையில் விருத்தாசலம் பாலக்கரையில் வாகன தணிக்கையில் தனிப்படை காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில், அவரிடம் வண்டிக்கு உண்டான எந்த ஆவணங்களும் இன்றி முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியுள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அவர் அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் வடிவேல் (வயது 20) என்பதும், தற்போது விருத்தாசலம் அருகே உள்ள ராசாப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது. 


மேலும் அவர் கொண்டு வந்த வாகனம்,   திருடி கொண்டு வந்ததும்  தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவருடன் அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் பாலாஜி(24), முதுகுளம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வம் மகன் ராஜேஷ் (20) ஆகியோர் சேர்ந்து விருத்தாசலம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் 8 மொபட் வண்டிகள், 2 பைக்குகள் மற்றும்  2 லட்சம் மதிப்பிலான டிராக்டர் உள்ளிட்டவைகளை திருடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மொபட் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவைகளின் மொத்த மதிப்பு சுமார் 4 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்