Skip to main content

வி.ஏ.ஓ. கொலை வழக்கு; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

VAO issue Court action verdict
 லூர்து பிரான்சிஸ்

 

கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 மாதத்தில் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர்  கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது இந்த வழக்கில் 52 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டு, அரிவாள் உள்ளிட்ட 13 பொருட்கள் குறியீடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மணல் கொள்ளையர்களான ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வீ.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 5 மாதங்களில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.