Skip to main content

வசமாக சிக்கிய வி.ஏ.ஓ! 

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
VAO caught in the grip!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோலையன் மகன் கருப்பன் (வயது 48). இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு வேம்பனூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் 20 சென்ட் புஞ்சை நிலத்தை 10 ஆயிரத்திற்கு வாங்கி அதில் வீடு கட்டி வசித்து வருகிறார். அந்த இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் பெறுவதற்காக கடந்த 26.9.23 ஆம் தேதி விண்ணப்பம் செய்துள்ளார். அதற்குப் பிறகு 20.12.2023 ஆம் தேதி இவரது விண்ணப்பம் இணையதளத்தில் பார்த்தபோது நிராகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

அதனால் கருப்பன் தனிப் பட்டா வேண்டி மீண்டும் 19.1.2024 ஆம் தேதி இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளார். அவரது மனுவின் நிலை குறித்து 22.1.2024 ஆம் தேதி பார்த்தபோது மனு நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் கருப்பன் வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ. சோலை ராஜ் (வயது 27) என்பவரைச் சந்தித்து தனது பட்டா மாறுதல் குறித்து கேட்டுள்ளார். அதற்கு வி.ஏ.ஓ. சோலை ராஜ், நான் தயார் செய்து அனுப்பி வைத்தால் தான் தனிப் பட்டா உங்களுக்கு கிடைக்கும். அதற்காக பத்தாயிரம் ரூபாய் தனக்கு தனியாக கொடுத்து விட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கருப்பன் 1997இல் நான் வாங்கிய இடத்துக்கே பத்தாயிரம் ரூபாய் தான் கொடுத்தேன். பட்டா மாற்றுவதற்கு பத்தாயிரம் ரூபாய் கேட்கிறீர்களே, நான் கூலி தொழிலாளி, உங்க தொகையை குறைச்சு சொல்லுங்க சார் என்று கேட்டுள்ளார். 

VAO caught in the grip!

அதற்கு வி.ஏ.ஓ. சோலை ராஜ், மூவாயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ஏழாயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் பண்ணித் தர முடியும். இல்லன்னா போன முறை மாதிரியே இப்பவும் உங்களுக்கு ரிஜெக்ட் ஆகிடும் என்று சொல்லி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பன், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரின் பேரில் டி.எஸ்.பி.  மணிகண்டனின் தலைமையில், ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் குழுவினருடன் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில், கருப்பனிடமிருந்து விஏஓ சோலை ராஜ் இன்று 23.1.2024 காலை 11:30 மணியளவில் லஞ்சப் பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக சோலைராஜை கைது செய்தனர். அத்துடன் வி.ஏ.ஓ. சோலைராஜ் லஞ்சப் பணம் பெறுவதற்கு உடந்தையாக இருந்த பாஸ்கர் (வயது 43) என்பவரையும் கைது செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்