VAO Assistant issue

Advertisment

தர்மபுரி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், தான் செய்த குற்றத்தை உதவியாளரை ஒப்புக்கொள்ளும்படி தொடர்ந்து மிரட்டி வந்ததால், விசாரணைக்கு பயந்து உதவியாளர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒன்னப்பகவுண்டன அள்ளியில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) ஆக பணியாற்றி வருபவர் ரவீந்திரன் (35). கடந்த 2018 முதல் 2020ம் ஆண்டு வரை பாப்பாரப்பட்டி விஏஓ ஆக பணியாற்றி வந்தார்.

பாப்பாரப்பட்டியில் பணியாற்றியபோது பலரிடம் பட்டா மாற்ற, சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவீந்திரன் ஒன்னப்பகவுண்டன் அள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Advertisment

இதனால் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சிலர் அவருக்கு போன் செய்து, எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பட்டா மாற்றம் செய்யாமல் ஒன்னப்பகவுண்டன அள்ளிக்குச் சென்று விட்டீர்கள் எனக்கூறி, பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். பணம் தராவிட்டால் பட்டா மாற்றம் செய்து கொடுங்கள் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, தற்போது பாப்பாரப்பட்டி விஏஓ ஆக பணியாற்றி வரும் அண்ணாத்துரை என்பவருடைய கையெழுத்து மற்றும் சீல் ஆகியவற்றை ரவீந்திரன் போலியாக போட்டு, பணம் கொடுத்தவர்களிடம் சான்றிதழ் கொடுத்துள்ளார்.

இவருடைய நூதன மோசடி குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் தொடர்ந்து புகார்கள் சென்றன. ஆட்சியரின் உத்தரவின்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் ரவீந்திரனிடம் விசாரணை நடத்தினர்.

Advertisment

அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இருந்து தப்பிக்க எண்ணிய ரவீந்திரன், பாப்பாரப்பட்டியில் விஏஓ உதவியாளராக பணியாற்றி வரும் ரவி (43) என்பவரின் உதவியை நாடினார். அப்போது அவர், விஏஓ அண்ணாத்துரையின் கையெழுத்து மற்றும் அவருடைய அலுவலக முத்திரையை தான்தான் போட்டதாக ரவியை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் ரவிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.

விஏஓ ரவீந்திரன் மற்றும் இ-&சேவை மையம் நடத்தி வரும் ஒருவரும் சேர்ந்து விஏஓ உதவியாளர் ரவியிடம் தங்கள் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு விசாரணைக்கு ஆஜராகும்படியும் இல்லாவிட்டால் ரவி மீது உயர் அதிகாரிகளுக்கு மொட்டை பெட்டிஷன் போட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில், தான் செய்யாத குற்றத்தை செய்ததாக எதற்காக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கருதிய ரவி, விசாரணைக்கு பயந்து, ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) காலை தனது வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயக்க நிலையில் கிடந்த அவரை மீட்ட உறவினர்கள், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில் பாப்பாரப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.