
மோகனூர் அருகே, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது பெண் வி.ஏ.ஓ. கையும் களவுமாகக் காவல்துறையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் விவசாயி விஸ்வநாதன். இவருடைய மனைவி தீபா (43). இவர், பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ்.கொந்தளத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றி வந்தார். உள்ளூரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர், தனது பூர்வீக நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய மனு கொடுத்து இருந்தார். பெயர் மாற்றம் செய்ய 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தீபா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெகநாதன், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து தீபாவை பிடிக்கத் திட்டமிட்ட காவல்துறையினர், ஜெகநாதனிடம் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பினர்.
செப். 4ம் தேதி ஜெகநாதன், வி.ஏ.ஓ. தீபாவிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தார். அதை வாங்கியபோது, ஏற்கனவே அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் நல்லம்மாள் மற்றும் காவலர்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
பட்டா பெயர் மாற்றத்திற்காக 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பெண் வி.ஏ.ஓ. கைதான சம்பவம் நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.