VAO arrested for taking bribe of Rs 5,000

Advertisment

சிதம்பரத்தில் பட்டா மாற்றம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் சி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (வயது 36). இவர் சிதம்பரம் அருகே உள்ள பண்ணப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் அவரது தம்பியின் நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்கு விண்ணப்பித்துள்ளார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாற்றம் செய்ய முடியும் எனக்கூறி கடந்த 3 மாதங்களாக அலைக்கழித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ்பாபு லஞ்ச ஒழிப்பு துறையிடம் தகவல் அளித்துவிட்டு அவர்கள் அளித்த ரூ. 5 ஆயிரம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைவெள்ளிக்கிழமை மதியம் வி.ஏ.ஓ புகழேந்தியிடம் சிதம்பரம் பெருமாள் தெருவில் உள்ள சுபலட்சுமி லாட்ஜில் இருந்தபோது கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான 5-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.