/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vao demo1.jpg)
கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ) தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட இணையம் வழியாக வழங்கப்படும் சான்றிதழ் விநியோகம் பெருமளவு முடங்கியுள்ளது.
கிராம அளவில், மக்களுக்கும் அரசுக்கும் இணைப்புப் பாலமாக இருப்பதில் கிராம நிர்வாக அலுவலர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், பட்டா மாறுதல் வரை 19 வகையான சான்றிதழ்களை வழங்கும் பணிகளையும் விஏஓக்களே மேற்கொள்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 12618 விஏஓக்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், காலிப்பணியிடங்கள் போக தற்போது 9500 விஏஓக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் கடந்த பதினைந்து நாள்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, கடந்த நவம்பர் 28ம் தேதி முதலே சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகளை நிறுத்தி விட்டனர்.
சேலம் மாவட்டத்தில் 70 சதவீத விஏஓக்கள் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமையன்று மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஏஓக்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mohanraj_0.jpg)
போராட்டம் குறித்து தமிழ்நாடு விஏஓக்கள் சங்க சேலம் மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் கூறுகையில், தமிழகத்தில் பணியாற்றும் விஏஓக்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். விஏஓக்கள் அவரவர் பணியாற்றும் ஊரிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று அரசு ஆணை உள்ளது. ஆனால், மனைவி, பிள்ளைகள், வயதான பெற்றோரை ஓரிடத்தில் விட்டுவிட்டு தொலைதூரத்தில் விஏஓக்கள் பணியாற்றுவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. காலத்திற்கேற்றவாறு அந்த அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும்.
விஏஓக்களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலக வசதி செய்து தர வேண்டும். 33 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விஏஓக்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டுமானால்கூட கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது.
இணையவழி சான்றிதழ் வழங்குவதற்காக அரசு, விஏஓக்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கிறது. ஆனால் டேட்டா இணைப்புக்கான செலவை எங்கள் தலையில்தான் கட்டுகிறது. அந்த லேல்டாப்புகள் பழுதாகி, பயனற்றுக் கிடக்கின்றன. இதனால் இணையவழி சான்றிதழ் பணிகளை நாங்கள் எல்லோருமே தனியார் கணினி மையங்களுக்குச் சென்றுதான் செய்து வருகிறோம். இதற்காக மாதம்தோறும் 1000 ரூபாய் வரை கைக்காசை செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த செலவுகளை ஈடுகட்ட முடியாத விஏஓக்கள், கையூட்டு வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு அரசுதான் முழுமுதல் காரணம்.
தற்போது நடைமுறையில் உள்ள இ&அடங்கல் திட்டத்தால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். புதிய நடைமுறையை மாற்றி பழைய திட்டப்படியே அடங்கல் ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.
சேலம் மாவட்டம் முழுவதும் மாதத்திற்கு சராசரியாக 5000 சான்றிதழ்களை இணைய வழியில் விநியோகம் செய்து வந்தோம். தொடர் வேலைநிறுத்தம் காரணமாக சான்றிதழ் வழங்கும் பணிகள் 70 சதவீதம் முடங்கியுள்ளன. இதுவரை அரசுடனான பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை. விரைவில் வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்,'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)