ADVERTISEMENT

“மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றும் பணி தற்போது தொடங்கியுள்ளது...” - அமைச்சர் வீரமணி

02:45 PM Jan 27, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செட்டியப்பனூர் தொடங்கி திருப்பத்தூர், காரப்பட்டு ஊத்தங்கரை வரையிலான தேசிய நெடுஞ்சாலை 179 கி.மீ. தற்போதுள்ள இருவழிச்சாலை, சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கும் பணியினை ஜோலார்பேட்டை கோடியூர் அடுத்த மேட்டுசக்கரகுப்பம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர்கபீல் இருவரும் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

ADVERTISEMENT


இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி பேசும்போது, “திருப்பத்தூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றும் பணி தற்போது தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்த இச்சாலை, புதிய இரண்டு வழிச்சாலையாக அமைக்கத் திட்ட அறிக்கை தயாரித்து ஒப்பந்த நிலையில் சென்றது. அப்போது, சேலத்தில் இருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை வழியாகச் செல்லும்போது சுமார் 50 கி.மீட்டருக்கு மேல் தூரம் குறைகின்றது எனவும், போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும் இச்சாலை உகந்தது என்றும் மத்திய அரசு ஆய்வு செய்து இருவழிச்சாலை புதிய நான்கு வழிச்சாலையாக அமைத்து கொடுக்கப்படும் என்று மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்த நெடுஞ்சாலையினை மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.


அதன்பின்னர் நான்கு வழிச்சாலை அமைக்க ஆய்வுப் பணிகள், திட்ட அறிக்கைகள், நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு என கால தாமதங்கள் ஏற்பட்டன. பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதிப்படுகின்றனர், அதிக அளவில் சாலை விபத்துகளில் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று வந்த புகார்களைத் தொடர்ந்து, நமது பகுதி மக்களின் பிரச்சனையினை தீர்க்க மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையினை ஏற்று ஒரு வருடத்திற்கு முன்னதாகவே தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளையும் இடர்பாடுகளையும் களைந்து இத்திட்டம் உடனுக்குடன் தொடங்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். புதிய நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிக்கு இன்று முதல் சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டும் பணிகள் தொடங்கப்படும். மூன்று இடங்களாக பிரித்து பணிகளை விரைவாக மேற்கொள்ள பணி ஒப்பந்ததாரர் கட்டமைப்புகளை தயார் செய்து வருகின்றார். மொத்தம் 45 கி.மீ தூரம் சுமார் 24 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம், கதவணி கிராமம் அருகே சுங்கச் சாவடி அமைக்க 1.89 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 32 கி.மீ. தூரமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 கி.மீ.தூரமும் கொண்ட இப்பணிகளை விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும் ஒப்பந்ததாரர்களும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர் மற்றும் சேலம் செல்லும் பாதை மாநில அரசின் இருவழிப்பாதையாக இருந்தது. இந்த பாதையில் சுங்கச்சாவடி இல்லாமல் இருந்தது. சேலம் டூ சென்னை செல்லுதற்கான கிலோமீட்டரும் குறைவாக இருந்தது. இந்த இரண்டு காரணங்களால் இந்தச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இந்தச் சாலை பல ஆண்டுகளாக செப்பனிடாமல் வைத்திருந்தனர். இதனால் இந்தச் சாலை மிக மோசமான நிலையிலிருந்து வந்தது. அதிலும் குறிப்பாக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பாதை மிக மோசமாக இருந்தது.

இதற்காக கடந்த 10 ஆண்டுகளில் பலபல போராட்டங்களை மக்கள் நடத்தினர். இந்நிலையில் இந்தச் சாலையை புதுப்பிக்கப் போகிறோம் என இரண்டு மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போட்டார்கள் இதே அமைச்சர்கள். இந்நிலையில் மீண்டும் ஒரு பூமி பூஜை போட்டவர்கள், இந்தப் பாதை மத்திய தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவர்கள் இதனை இருவழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றி நிதி ஒதுக்கியுள்ளார்கள். இந்தச் சாலையில் சுங்கச்சாவடி அமையவுள்ளது என அமைச்சர் கூறியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT